கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவி ஒருவருக்கு உதவுவது போலக் காரில் அழைத்துச் சென்று, நடுவழியில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட த.வெ.க. நிர்வாகி கிறிஸ்டோபரின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் ஆளுங்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் கிறிஸ்டோபரைத் தனிப்படை அமைத்துக் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. “பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்” என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை இன்றைய முதல்வர் மறந்துவிட்டாரோ என்னவோ, இப்படி ஆளுங்கட்சி தவெக-வின் காமுக சார்களால் (SIR) பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
ஆட்சி தான் மாறியதே தவிர, காட்சி மாறவில்லை என்பதைப் போல், தற்போது பாலியல் சார்களுக்கான முகவரியாக (Address) தவெக மாறி நிற்கிறது. இவ்வளவு கொடுமைகளுக்கும் நடுவே “சிங்கப்பெண் அதிரடிப் படை” எங்கே போனது என்றும் தெரியவில்லை?. உறக்கநிலையில் உள்ளதோ (Hibernation Mode?). மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழகப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்- உங்களுக்கு உதவி செய்வதாக முகம் தெரியாத நபர்கள், குறிப்பாக தவெக-வினர் என்றால், உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுங்கள். உங்களை யாரேனும் தவறாக நெருங்க வருவதாக நினைத்தால், உடனே உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உபகரணங்களையும் உங்கள் கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள். “நமக்கு நாமே பாதுகாப்பு” என்பதே இந்த ஆட்சியின் அவல நிலை!” எனத் தெரிவித்துள்ளார்.
