ஆட்டிப்படைக்கும் அச்சம்; லஞ்சத்தை திருப்பி தந்த எஸ்ஐ

நமது நிருபர்

பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் எஸ்ஐ ஜான்சன், வழக்கு தொடர்பான ஒருவரை மிரட்டி ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்றது, அதை ஏட்டு நாகராஜ் சம்பந்தப்பட்ட நபரிடமே திருப்பி கொடுக்க முயன்றது குறித்த உரையாடல் ஆடியோ வைரல் ஆகியுள்ளது.

பொள்ளாச்சியில் முருகேஷ் என்பவரிடம் வழக்கு தொடர்பாக மிரட்டி ரூ. 5 ஆயிரம் லஞ்சத்தை போலீஸ் எஸ்ஐ ஜான்சன் பெற்றுள்ளார். தற்போது லஞ்சத்திற்கு எதிராக தமிழக அரசின் செயல்பாடுகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அச்சம் அடைந்த எஸ்.ஐ., ஜான்சனுக்கு, ‘தான் மாட்டிக் கொள்வோமோ’ என்று அச்சம் ஆட்டிப்படைத்துள்ளது.

இதையடுத்து லஞ்சமாக பெற்ற பணத்தை, திருப்பி கொடுக்க முடிவு செய்தார். எஸ்ஐ ஜான்சன் உத்தரவின் பேரில், அந்தப்பணத்தை ஏட்டு நாகராஜ் சம்பந்தப்பட்ட நபரிடமே திருப்பி கொடுக்க முயன்றுள்ளார். இதற்கென சம்பந்தப்பட்ட நபரை போனில் அழைத்து பணத்தை வாங்கிக்கொள்ளும்படி ஏட்டு கூறியுள்ளார். ஆனால், அந்த வாலிபரோ, பணத்தை பெற மறுத்துள்ளார்.

இது தொடர்பாக ஆடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அந்த ஆடியோவில், கொடுத்த பணத்தை வந்து பெற்றுக்கொள்ளுமாறு பேசும் நபரிடம் ஏட்டு நாகராஜ் திரும்ப, திரும்ப வலியுறுத்துகிறார். ஆனால் கொடுத்த ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாகவே இருக்கட்டும் என்று ஏட்டுவிடம் அந்த நபர் கூறுகிறார்.

இப்படி இருவரும் உரையாடும் ஆடியோ, இணையத்தில் வைரல் ஆன நிலையில், போலீஸ் எஸ்ஐ ஜான்சன், அவருக்கு உடந்தையாக இருந்த ஏட்டு நாகராஜ், இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source link