ஆட்டோக்களில் புதிய கட்டணம் அமல் 6 மாதத்தில் மீட்டர்களை திருத்த முடிவு

சென்னை: தமிழகத்தில், ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம், நேற்று முதல் அமலானது. ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள, 4.20 லட்சம் மீட்டர்களை, அடுத்த ஆறு மாங்களில் திருத்தி அமைக்க, போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, கடந்த 13 ஆண்டுகளுக்கு பின், புதிய கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, முதல் 1.8 கி.மீ., துாரத்திற்கு, குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாய், கூடுதலாக ஒவ்வொரு கி.மீ.,க்கும், 25 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஆட்டோ தொழிற்சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அத்துடன் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளன.

* அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம்:

ஆட்டோ மீட்டர் கட்டணம் அறிவிப்புக்கு முன், தொழிற்சங்கங்களிடம் பேசி இருக்கலாம். அரசு ஆட்டோ செயலியை தொடங்க வேண்டும். முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். பண்டிகை காலங்களில், நல வாரியத்தில் இருந்து, ஓட்டுனர்களுக்கு 5,000 ரூபாய் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்க செயல் தலைவர் ஜாஹிர் ஹூசேன்:

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்திய, தமிழக போக்குவரத்து துறைக்கு நன்றி. ஆட்டோ மீட்டர் திருத்தம் செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.

* தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள்:

ஆட்டோ மீட்டர் புதிய கட்டணம், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை ஆட்டோ ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டும். தங்கள் மீட்டர்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் திருத்த வேண்டும். அதுவரை, போக்குவரத்து இணையதளத்தில் உள்ள, கட்டண அட்டையை பதிவிறக்கம் செய்து, பொதுமக்கள் பார்வைக்காக, வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.

ஆட்டோக்களில் பார்வைக்கு வைத்துள்ள கட்டண அட்டையில் உள்ள கியூ.ஆர்., குறியீடை, ‘ஸ்கேன்’ செய்து, கட்டண அட்டையில், உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி கொள்ளலாம். கூடுதல் கட்டணம் வசூலித்தால், பொதுமக்கள் 1800 425 5430 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தமிழகம் முழுதும் 4.20 லட்சம் ஆட்டோ மீட்டர்களில், திருத்தம் செய்ய வேண்டி உள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Source link