சென்னை: ஆட்டோ கட்டணத்தை உயர்த்த கோரி, இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில், சென்னையில் இன்று (அக்.,27), தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை நோக்கி பேரணி நடத்தப்பட்டது.
சங்கத்தின் மாநில தலைவர் மனோகர் தலைமையில், எழும்பூர் சித்ரா தியேட்டர் அருகில் இருந்து பேரணி புறப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை வரை நடந்தது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.
‘ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின், காடேஸ்வரா சுப்பிரமணியம் அளித்த பேட்டி:
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால், ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போதைய நிலைக்கு ஏற்ப, கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். மிகவும் நலிவடைந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்.
இலவச பஸ் சேவை வாயிலாக, ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக சுமை இல்லாத பொருட்களை, ஆட்டோவில் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும். மானியத்துடன் கூடிய குறைந்த வட்டியில், ஆட்டோ வாங்க கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நிர்வாகிகள், போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபனை, தலைமை செயலகத்தில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
