கோவை: கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை பராமரிப்புக்கு டெண்டரே விடாமல், ஆண்டுக்கு, 5.75 கோடி ரூபாய் என, மூன்று ஆண்டுகளாக பணி ஒதுக்கி, முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
கோவை மாநகராட்சியில், வரி வசூல், திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்க வளாகத்தில், 2024ம் ஆண்டு, 1.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இதன் பராமரிப்பில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அலுவலகத்தில், 40 பேர், களத்தில், 40 பேர் வீதம், 80 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வரி செலுத்துவது தொடர்பாக மக்களுக்கு நினைவூட்டுவது, திடக்கழிவு மேலாண்மைக்கு செல்லும் வாகனங்களை ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர்.
இதற்கான ஊழியர்களை பணியமர்த்தி, கட்டுப்பாட்டு அறையை பராமரிக்கும் பணியை, ‘ரிலையன்ட் குளோபல் க்ரீன் எனர்ஜி அண்ட் கோ’ நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக ஆண்டுக்கு, 5.75 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளாக டெண்டரே இல்லாமல், அந்நிறுவனத்துக்கு பணி ஒதுக்கியதாக புகார் எழுந்துள்ளது.
மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில், ‘விதிகள்படி, 5 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணிக்கு டெண்டர் அவசியம். பேரிடர் போன்ற அவசர காலங்களில் 50 லட்சம் ரூபாய் வரை டெண்டர் இல்லாமல் பணி ஒதுக்க விதி உள்ளது. அதை சாதகமாக பயன்படுத்தி, பல்வேறு பணிகளை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டுமே ஒதுக்கியுள்ளனர்.
‘தி.மு.க., ஆட்சியில் உயரதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்ததால், ரிலையன்ட் நிறுவனத்துக்கு இப்படி பல்வேறு பணி வழங்கப்பட்டது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜாவிடம் கேட்டபோது, ”முழுமையாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
