பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது பிறந்த நாள் விழா மற்றும் 64வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் இன்று (30-10-26) கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பசும்பொன்னுக்கு சென்று அங்கிருக்கும் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தேர்தல் தேதி அறிவிக்கட்டும், அதை பற்றி பிறகு பேசலாம்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், முத்துராமலிங்கத் தேவருக்கு புகழாரம் சூட்டினார். இதையடுத்து மு.க.ஸ்டாலின் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அதை கூட்டணியாக பார்க்க முடியாது. தேர்தல் வரட்டும் பார்ப்போம் என்கிறார் என்றால் நானும் அதை தான் சொல்வேன். திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் விலகி என்னை பொது வேட்பாளராக நிறுத்தும் என்ற கருத்தை யார் உருவாக்குவது? இதை திமுகவோ, அதிமுகவோ, நாங்களோ எடுக்கவில்லை. ஆனால் இந்த பேச்சை கிளப்பிவிட்டது தவெகவும் அதன் நிர்வாகிகளும் தான்.
குறிப்பிட்ட சமூகம், மதம் இல்லாமல் நான் மட்டுமல்ல எங்களுடைய கட்சியினர் அனைவரும் பொது வேட்பாளர்கள் தான். நாங்கள் இதை அரசியல் தேர்தல் போட்டியாக நினைக்கவில்லை, அறப்போராக நினைக்கிறோம். சீமானின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று என்னை சந்திக்கும் எல்லோரும் விருப்பம் தெரிவிக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் அம்பாசமுத்திரத்தில் நான் போட்டியிடுகிறோம். ஆதரவு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வார்களா? பசியில் இருப்பவருக்கு பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வார்களா?. ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவா நாதகவா என்று இருந்ததைப் போல் இந்த தேர்தலில் தவெகவா நாதகவா என போட்டி இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
