ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்த மக்கள் அங்கு கூடியிருந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் சூரம்பட்டி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களின் உடைமைகளை சோதனை செய்து உள்ளே அனுமதித்து வந்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு இன்று காலை வந்த முதியவர் திடீரென தான் கொண்டு வந்த வாட்டர் பாட்டிலில் இருந்து மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றியவாறு கலெக்டர் அலுவலக உள்ளே வர முயற்சி செய்து தீக்குளிக்க முயன்றார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து அவரது உடல் மீது ஊற்றினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த முதியவரிடம் விசாரணை நடத்திய போது, முதியவர், ஈரோடு பெரியார் நகர் பொய்யேரிக்கரை பகுதியைச் சேர்ந்த முருகன் (74) என்பதும் கடந்த சில நாட்களாகவே ஆதார் அட்டை கேட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு ஏறி இறங்கி வருகிறேன். தனக்கு ஆதார் கார்டு வழங்கவில்லை. அதிகாரிகள் தன்னை அலைக்கழிப்பதால் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றேன் என்றார். தொடர்ந்து முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
