மதுரை: ஆறுகளில் நுரை பொங்க சோப்பு ஷாம்புதா பயன்பாடு தான் காரணம் என அமைச்சர் ராஜீவ் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் “இது உலகமகா கண்டுப்பிடிப்பு.. இதுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்”.. தெரியாதனமா நான் சொன்னதுக்கு என்ன எப்படிலாம் ஓட்டுனீங்க? தெர்மாக்கோல்னுலாம் சொன்னீங்களே! என கிண்டல் செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ,” நாளை மதுரைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். 30-ம் தேதி தெப்பக்குளம் பகுதியில் மருதுசகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பசும்பொன் செல்ல உள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை. 4 மாத ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை விஜய் கொடுத்துள்ளார். விலை உயர்வை தீபாவளி பரிசாக தவெக அரசு கொடுத்துள்ளது.
கையாலாகாத முதல்வர், ஜென்சி முதல்வர் என சொல்லிக்கொண்டு எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளார் விஜய். எதைப் பற்றியும் வாய் திறக்காமல், கவலைப்படாமல் இருக்கிறார். கைதட்ட, சிரிக்க சுண்டினால் பாவனை செய்ய, பேசக்கூட பொம்மைகள் வந்துவிட்டன. முதல்வர் எதற்கும் வாய்திறக்க மாட்டேங்கிறார்.
இந்திராகாந்தி எமர்ஜென்சி அமல்படுத்தியது போல ஊடகங்களை முதல்வர் தணிக்கை செய்கிறாரா எனத் தெரியவில்லை. மின்சார டெண்டரை இப்போது ரத்து செய்துள்ளார்.
ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்கள். மீண்டும் வாபஸ் வாங்குகிறார்கள். டெண்டர் வெளியிட்டு திரும்பப் பெறுகிறார்கள். இதெல்லாம் ஊழலுக்கு வழிவகுக்கும். தவெக அரசு வந்த பிறகு மின்கொள்முதலை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். 20 ரூபாய் கொடுத்து வாங்கிய திமுகவை கடுமையாகப் பேசினார்கள். ஆனால் 41 ரூபாய்க்கு மின்சாரம் வாங்குகிறார்கள். அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் பிறகு ரத்து செய்துள்ளார்கள்.
வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். ஆனால் வெங்காய விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி நடக்கிறது. சர்கார் படத்தில் வருவது போல விஜய் செய்வார் என ஒரு மாயையில் மக்கள் வாக்களித்தனர். ஆனால் இன்று ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
மூதாட்டியிடம் கேஷுவலாக நகை பறித்துச் செல்கிறார்கள். பாட்டி முதல் பாப்பா வரை இங்கு பாதுகாப்பு இல்லை. அமைச்சர்களுக்கு என்ன பேச வேண்டுமென்றே தெரியவில்லை.
சட்டத்துறை அமைச்சர் துறையிலேயே ஊழல், குறைபாடு உள்ளது. தவெக ஆட்சியில் கிளைச்சிறையை உடைத்துக்கொண்டு செல்கிறார்கள். தவெக ஆட்சியில் எதுவும் நன்றாக இல்லை. இளைஞர்களையும் மக்களையும் ஏமாற்றி வந்துள்ளார் விஜய். குளிக்கும் ஷாம்பு, சோப்பால் நுரை வருகிறது; நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது எனச் சொல்லும் அமைச்சருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும். நான் ஈஜிப்து வெங்காயம் எனப் பேசியதற்கு சின்ன பசங்கள் எல்லாம் தெர்மாக்கோல் எனக் கிண்டல் செய்தார்கள்.
விஜய் பசும்பொன் வந்தால் அவருக்குத்தான் பெருமை. இந்த மாதிரி ஆளுக்கு எதற்குச் செல்ல வேண்டும் என நினைத்தாரோ என்னவோ. எம்ஜிஆர் என்று யாராவது சொல்ல முடியுமா? கால்தூசிக்குக்கூட வரமாட்டார்கள். புகழ் என்பது நீர்க்குமிழி போல. வரும், எழும்பும், அப்படியே சென்றுவிடும். இருக்கும் போது கொடுக்க வேண்டும். ஒரு எம்ஜிஆர்தான். அவரைப் போல வேறு யாரும் அப்படி வர முடியாது.
எத்தனை நடிகர்கள் வந்தாலும் அப்படி வர முடியாது. தனுஷைப் பார்த்து விஜய் கட்சிக்காரர்கள்தான் பயப்படுகிறார்கள். எங்களுக்கு தனுஷைப் பார்த்து பயம் இல்லை. சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் வந்தால் நல்லதுதானே? ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம். எம்ஜிஆர் போல எவனும் இனி பிறக்க முடியாது. எத்தனை நடிகர்கள் வந்தாலும் எவனும் எம்ஜிஆர் ஆக முடியாது. இப்போது இருக்கிற முதல்வர் விஜய் உட்பட யாரும் எம்ஜிஆர் போல ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்தது கிடையாது” என்றார்.
