ஆந்திராவை நெருங்கும் அர்னாப் புயல்: ரயில், விமான சேவை ரத்து

வங்கக்கடலில் உருவான ‘ அர்னாப் ‘ என்ற புயல், மிக தீவிர புயலாக உருவெடுத்தது. இது நாளை விசாகப்பட்டினம் – பபட்லா இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அப்பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. இப்புயல் நாளை,அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் ஆந்திர கடற்கரையை நெருங்கும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது.

ஆந்திராவிலும், ஒடிசாவிலும் கனமழை கொட்டி வருகிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு மாநிலங்களிலும் 65 ரயில் சேவை மற்றும் 21 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆந்திராவில் 84 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். 1,087 மருத்துவ குழுவினர் , ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 5 ஆயிரம் கர்ப்பிணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விஷமுறிவு மருந்துகளும் தயாராக வைக்கப்பட்டன. 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

புயலின் தாக்கம் காரணமாக ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

அண்டை நாடுகள்

இலங்கையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மண் சரிவு, காட்டாற்று வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டு ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

அர்னாப் புயல், நேபாளத்தை நோக்கி வரலாம் என அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. இதனால், நாளை மறுநாள் கனமழை , கடுமையான பனிப்பொழிவு, பனிச்சரிவு ஏற்படும் எனக்கூறியுள்ளது. மலைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டம் என சுற்றுலா பயணிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Source link