புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் உள்ள வெள்ளனூர் கிராமத்தில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வட்டாட்சியர் கவனத்திற்கே தெரியாமல் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா தயாராகி உள்ளது குறித்து குளத்தூர் வட்டாட்சியர் இலுப்பூர் கோட்டாட்சியரிடம் கேட்க நான் பட்டா மாறுதல் செய்யவில்லை என்று கூறியுள்ளார். கோட்டாட்சியர் அனுமதி இல்லாமல் அவரது ஐ.டி.யை பயன்படுத்தி அரசு புறம்போக்கு நிலத்தைப் பட்டா மாறுதல் செய்தது யார் என்று நடத்தப்பட்ட விசாரணையில் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த ரஞ்சித் என்ற உதவியாளர் தான் கோட்டாட்சியரின் ஐடி யை பயன்படுத்தி பட்டா மாறுதலுக்கு அவரது ஆன்லைன கையெழுத்தைப் பதிவு செய்துள்ளார் என்றும் இதற்கு உடந்தையாக இருந்தது மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக இருந்த பிரசன்னா என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் குளத்தூர் வட்டாட்சியர், இலுப்பூர் கோட்டாட்சியரின் அறிக்கைகளின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைச்சாமி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உதவியாளர் ரஞ்சித்தை பணியிடை நீக்கம் செய்தார். இந்த செய்தி நக்கீரன் இணையத்தில் கடந்த 17 ந் தேதி வெளியான நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் பிரசன்னா கலால் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து தனிக் குழு நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களில் இது போல பல நூறு கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனி நபர்களின் நிலங்களை மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர்களின் இணைய ஐ.டி.யை முறைகேடாகப் பயன்படுத்தி சில தனி நபர்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக இருந்து கலால் துறைக்கு மாற்றப்பட்ட பிரசன்னா, புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் லதா ஆகியோரையும் மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் நில அளவைத்துறையில் பணியில் உள்ள போலி பட்டா மாறுதலுக்கு உடந்தையாக இருந்த பெண் உதவியாளர் மீது நடவடிக்கை தயாராகி உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் கூறும் போது, இது வழக்கமாக நடந்து வருகிறது. உதவியாளர்கள் மேல் உள்ள நம்பிக்கையில் மாவட்ட அதிகாரிகள் ஐ.டி. பாஸ்வோர்டை கொடுத்துவிடுகிறார்கள். அதனைத் தவறாகப் பயன்படுத்தி இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக இது தான் நடக்கிறது.
மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக இருக்கும் போது பணியிடை நீக்கம் செய்தால் விமர்சனம் ஆகும் என்பதால் தான் பிரசன்னாவை காலாலுக்கு மாற்றி பிறகு பணியிடை நீக்கம் செய்தனர். அதே போல இப்போது சிக்கியுள்ளவர்கள் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் இல்லை இன்னும் 5க்கும் மேற்பட்ட வட்டாட்சியர்கள், பல உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளனர். அவர்கள் பற்றிய விபரங்களும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு சென்றுள்ளது. விரைவில் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். கடைசி நேரத்தில் ஆட்சியாளர்களின் அழுத்தம் காரணமாகப் பலர் தப்பிக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும், திருமயம் வட்டத்தில் பல கிராமங்களிலும் ஊரில் ஆள் இல்லாதவர்களின் சொத்துகளை முறைகேடுகள் செய்து பல சொத்துகளை மாற்றியுள்ளனர். ஆகவே இதற்கென தனி விசாரணைக் குழு அமைத்து விசாரித்தால் ஏராளமானவர்கள் சிக்குவார்கள் என்கின்றனர் வருவாய்த்துறையினர்.
