– நமது நிருபர் –
இந்தியா – ரஷ்யா கூட்டு முயற்சியில் உருவானது பிரமோஸ் ஏவுகணை. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ஏவுகணை, பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நமது ராணுவத்திற்கு பேருதவி செய்தது. இதனால், இந்த ஏவுகணைகளை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.
இந்த ஏவுகணையை தயாரிக்கும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஜெய்தீர்த் ஜோஷி இந்தியா டுடே சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் சர்வதேச சந்தையில் பிரமோஸ் ஏவுகணைக்கு தேவை அதிகமாக இருக்கிறது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கியது. இதனை உலக நாடுகள் விவாதிக்கின்றன. எதிரி நாடுகளின் ரேடாரை மீறி, இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் உள்ளது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பிரமோஸ் ஏவுகணை உலகின் மிகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக உருவெடுத்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான மோதலின் போது, நமது முப்படைகளும் பிரமோஸ் ஏவுகணையுடன் தயாராக இருந்தன. நிலம், போர்க்கப்பல் மற்றும் போர் விமானம் என எங்கிருந்தாலும் இந்த ஏவுகணையை செலுத்த முடியும்.
அடுத்த தலைமுறைக்கான பிரமோஸ் ஏவுகணையை தயாரிக்கும் பணியில் மும்முரமாக உள்ளோம். ரஷ்யா உடன் உள்ள ஒப்பந்தப்படி அந்நாட்டின் ஆயுதப்படைகளுக்கு இந்த ஏவுகணையை வழங்க தயாராக உள்ளோம். இதற்கான பேச்சு நடக்கிறது. இவ்வாறு ஜெய்தீர்த் ஜோஷி கூறினார்.
