விடுமுறை நாட்களில்தான் மாணவர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் நூலகங்களுக்கும் அறிவியல் மையங்களுக்கும் வருவார்கள் என்ற அடிப்படைப் புரிதல்கூட தவெக அரசுக்கு இல்லையா? என்று திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.
விடுமுறை நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பெரியார் அறிவுலகத்தைப் பார்த்து அதை உருவாக்கிய ஆட்சியையும், முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சாதனையையும் பாராட்டிவிடுவார்கள் என்ற அச்சமா? என்று திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது. கோவையில் பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட இன்று வந்த மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளே செல்ல முடியாமல் தவிப்பதாகத் தகவல்கள் வருவதை சுட்டிக்காட்டியுள்ள திமுக, மக்கள் வருவதற்காகத்தானே நூலகம்? மக்கள் அதிகம் வரும் நாளிலேயே அதை மூடி வைப்பது என்ன நிர்வாகம் என்று வினவியுள்ளது.
பாஜகவின் கோட்பாடுகளைப் பின்பற்றும் தவெக
பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் TVK, பாஜகவின் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக எழும் விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது என்று திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது. ஆன்மிக நம்பிக்கையுள்ள மக்கள்கூட அறிவைப் போற்றும் விதமாகத்தானே விஜயதசமியைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் இல்லங்களில் புத்தகங்களை வைத்து வழிபடுவதும், குழந்தைகளுக்குக் கல்வியைத் தொடங்கி வைப்பதும் வழக்கம் என்று திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.
அறிவுலகக் கதவுகள் மாணவர்களுக்கு மூடப்பட்டிருப்பது ஏன் ?
அறிவைப் போற்றும் நாளிலேயே கோவையின் அறிவுலகக் கதவுகள் மாணவர்களுக்கு மூடப்பட்டிருப்பது ஏன்? என்று திமுக ஐடி விங் வினவியுள்ளது. இன்றே, மதியமாவது பெரியார் அறிவுலகத்தைத் திறந்து பொதுமக்களையும் மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும் திமுக கேட்டுக்கொண்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் விடுமுறை நாட்களில் மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் அறிவுலகம் செயல்பட வேண்டும் என்றும், அறிவைப் பரப்புவதற்கு விடுமுறை நாளே இருக்கக்கூடாது எனவும் திமுக ஐடி விங் வலியுறுத்தியுள்ளது.
“அறிவுக்கு விடுமுறை விட்டிருக்கும் ஆட்சி” -டி.ஆர்.பி.ராஜா
ஆயுத பூசைக்கு பெரியார் அறிவுலகத்திற்கே ‘லீவு விட்ட’ அறிவார்ந்த ஆட்சி இன்றைய TVK ஆட்சி என்று திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார். பேஷ் பேஷ் என்று கேலியாக பதிவிட்ட அவர், அறிவாலயத்து கலைஞர் திறந்து வைத்த அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்றும் திறந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். அது சரி அறிவுக்கு விடுமுறை விட்டிருக்கும் ஆட்சியில் இது அதிசயம் அல்லவே எனவும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
Source link
