ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி தொடர் விடுமுறைக்காகச் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல வழக்கமாக செயல்படும் கிளாம்பாக்கம் , கோயம்பேடு மற்றும் மாதவரம் நிலையங்களை அடுத்து மறைமலைநகர் மற்றும் காலநிலை பூங்கா என இரண்டு இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
இதில் மறைமலை நகர் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே போல் காலநிலை பூங்கா தற்காலிகப் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு தற்காலிக பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் குறைவாக இருப்பதால் மீண்டும் பழையபடி கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மறைமலை நகரில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதி பேருந்துகள் 5வது நடைமேடையில் இருந்தும் , காலநிலை பூங்காவில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 7வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
