லண்டன்: ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியான யூகங்களை மறுத்துள்ள இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, ஆரவாரம் சத்தம் இல்லை என்றால், கொண்டாட்டம் இல்லை எனக்கூறியுள்ளார்.
நேற்று லண்டனில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியுடன் துவக்க வீரர் ரோகித் சர்மா ஓய்வு பெற போவதாக தகவல்கள் பரவின. ஆனால், ரோகித் சர்மா எந்த பதிலும் அளிக்காமல் இருந்தார். நேற்று நடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 110 பந்துகளில் 138 ரன் எடுத்து சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் பேசிய வீடியோ ஒன்றை ரோகித் சர்மா வெளியிட்டு உள்ளது.
அந்த வீடியோவில் ரோகித் சர்மா கூறியுள்ளதாவது: பேட்டிங் செய்வது தான் எனது வேலை. விளையாடுவது, நாட்டிற்காக பிரதிநிதித்துவம் செய்வது, அணிக்காக பிரதிநிதித்துவம் செய்வது. நான் அறிமுகம் ஆனதில் இருந்து இதனைத் தான் செய்ய சொல்லி உள்ளனர். அதனைத் தான் செய்யப்போகிறேன். நான் அறிமுகம் ஆனதிலிருந்தே என்னைப் பற்றிய பேச்சுக்கள் இருந்தன. நான் இங்கே இருக்கும் வரை, அது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
களத்தில் என்ன செய்கிறேன். அணி வெற்றியின் எனது பங்களிப்பு என்ன என்பது தான் முக்கியம். இப்போதைக்கு அதில் தான் எனது கவனம் உள்ளது. ஆரவாரம் இருக்கட்டும். ஆரவாரம் இல்லை என்றால், கொண்டாட்டம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனது பணி மைதானத்திற்கு உள்ளே. அவர்களது பணி மைதானத்திற்கு வெளியே. அப்படித்தான் அதனை பார்க்கிறேன். நேற்று நல்ல முறையில் விளையாடியும் தோல்வி அடைந்தது சற்று ஏமாற்றமாக தான் இருக்கிறது.இவ்வாறு அந்த வீடியோவில் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
