எழுதியவர்:Deeptiman Tiwary
இளைஞர்களின் கொந்தளிப்பு, வேலைவாய்ப்பின்மை மற்றும் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான கவலைகள், மேலும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை குறித்த போராட்டத்தை வெளிநாட்டுச் சக்திகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆகியவை அடுத்த வாரம் நடைபெறவுள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அகில பாரத காரியகாரி மண்டல கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தூரில் நவம்பர் 2 முதல் 4 வரை நடைபெறவுள்ள மூன்று நாள் கூட்டம், பாரம்பரிய அமைப்புகளின் கட்டமைப்பிற்கு வெளியே தங்களின் அரசியல் மொழியையும் அணிதிரட்டல் முறைகளையும் அமைத்துக் கொள்ளும் தலைமுறையினருடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது குறித்து சங்க பரிவாரத்திற்குள் விவாதங்கள் நடக்கும் சூழலில் வருகிறது.
இளைஞர்களின் கவலைகள் உண்மையானவை என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஒப்புக்கொண்டுள்ளார். விஜயதசமி உரையில் சில போராட்டங்களில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு இருக்கலாம் என்று அவர் கூறியது, இளைஞர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்த ஆர்.எஸ்.எஸ். நிலப்பாட்டை மாற்றுவதாகக் கருதப்படக் கூடாது; இவை இரண்டும் வெவ்வேறான விஷயங்கள் என்று மூத்த பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கூட்டம் குறித்த ஆர்.எஸ்.எஸ். அறிவிப்பில், புதிய ஊடக தளங்களின் உள்ளடக்கங்கள், போதைப் பொருள் பயன்பாடு, பாரதத்தின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீடு மற்றும் உலகளாவிய சூழ்நிலைகள் உள்ளிட்ட தற்போதைய முக்கிய விஷயங்கள் குறித்து விரிவான விவாதங்கள் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சங்கத்தின் நூற்றாண்டு விழா திட்டங்கள் மற்றும் பாகவத் தனது உரையில் குறிப்பிட்ட விஷயங்கள் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்.
இளைஞர்களிடையே நிலவும் பதற்றத்திற்கும் கோபத்திற்கும் உரையாடல் மூலமே பதிலளிக்க சங்கம் திட்டமிட்டுள்ளது. வரலாற்றில் இதுபோன்ற இளைஞர் கொந்தளிப்புகள் அனைத்து நாடுகளிலும் அவ்வப்போது நடந்துள்ளன. அவர்களுக்குச் செவிசாய்ப்பதும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதுமே சிறந்த வழியாகும். அவர்களைக் கட்டாயப்படுத்திச் சம்மதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆர்.எஸ்.எஸ். எப்போதும் இளைஞர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதன் கிளைகளில் வரலாற்று ரீதியாகவே இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளது. இன்றளவும் 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளில் வருகை தருபவர்களில் 60 சதவீதம் பேர் இளைஞர்களாவர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அகில பாரத ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் தேர்வு முறைகளில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட இளைஞர்களின் கவலைகள் விவாதிக்கப்பட்டன. மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சினைகள் குறித்து பதிலளித்த சங்கம், அமைப்பில் உள்ள குறைபாடுகளை ஒப்புக்கொண்டதுடன், இளைய தலைமுறையுடனான தொடர்பு வெறும் அறிவுரை வழங்குவதாக இல்லாமல், உரையாடலாகவும் அவர்களின் கவலைகளைப் புரிந்துகொள்வதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
சங்கத்தின் நூற்றாண்டு விழா திட்டங்களிலும் இளைஞர்களைச் சென்றடைவது ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இந்த நூற்றாண்டு விழ ஆண்டில் அமைக்கப்பட்ட இளைஞர் மாநாடுகளில் 39.25 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றுள்ளதாக பாகவத் தனது விஜயதசமி உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நடப்பாண்டின் தொடக்கத்தில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைமையிலான போராட்டத்தின் போது இளைஞர் கொந்தளிப்பு குறித்த சங்கத்தின் அணுகுமுறை வெளிப்படையாகத் தெரிந்தது. ஆகஸ்ட் 6 அன்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,000 ஜென் ஜி மற்றும் ஜென் ஆல்பா மாணவர்களுடன் பாகவத் கலந்துரையாடினார். அப்போது, இளைஞர்கள் எழுப்பிய குறைகள் நியாயமானவை என்றும், போராட்டம் என்பது ஜனநாயக உரையாடலின் ஒரு சட்டப்பூர்வ வடிவம் என்றும் கூறினார். ஜனநாயகத்தில் போராட்டம் என்பது உடன்பாட்டை உருவாக்குவதற்கான ஒரு வழி என்று கூறிய அவர், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தக்கூடாது என்றார்.
இருப்பினும், தனது விஜயதசமி உரையில், நியாயமான குறைகளுக்கும் அதைத் தவறாகப் பயன்படுத்தும் முயற்சிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை அவர் சுட்டிக்காட்டினார். அமைப்பில் உள்ள சிக்கல்களும் குறைபாடுகளும் இயல்பாகவே போராட்டங்களுக்கு வழிவகுக்கும், ஆனால் இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் சக்திகள் இத்தகைய இயக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்று எச்சரித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தப் போராட்டத்தைக் குறிப்பிடாமல், வெளிநாட்டுச் சக்திகள் வேறுபாடுகளை ஆழப்படுத்தி, தங்களை பாதிக்கப்பட்டவர்களாக உணரும் எண்ணத்தை வளர்த்து, நிறுவனங்கள் மீதான நம்பிக்கையைக் குறைத்து, மோதல், தீவிர மணக்குறைவு, பிரிவினைவாதம், சீர்குலைவு மற்றும் குழப்பத்தை உருவாக்குவதாகக் கூறினார்.
வெளிநாட்டுத் தலையீடு குறித்த குற்றச்சாட்டு பற்றி கேட்டபோது, ஒரு நாட்டில் பொதுக் கொந்தளிப்பு ஏற்படும் போதெல்லாம், வெளிநாட்டுச் சக்திகள் அதைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றன என்றும், தற்போதைய போராட்டங்களில் அது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், வாக்காளர் பட்டியல் திருத்தப் போராட்டத்தில் வெளிநாட்டுத் தலையீடு இருந்ததாக மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டதற்கான எந்தவொரு பகிரங்க ஆதாரமும் இல்லை. ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் முகநூல் பதிவு ஒன்று தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்ட போது, அது செயல்பாட்டுப் பிழை என்று கூறி மத்திய அரசிடம் மெட்டா மன்னிப்பு கேட்டிருந்தது.
சமீபத்தில், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் உள்ளடக்கங்களைப் பரிந்துரைக்கும் முறை குறித்து அரசு தனது கவலைகளைத் தெரிவித்தது. பயனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பார்வையை மட்டுமே காட்டும் வகையில் பரிந்துரை அமைப்புகள் செயல்படக் கூடாது என்பதையும், தவறான அல்லது சூழலுக்குப் புறம்பான தகவல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்துமாறு அக்டோபர் 10 அன்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது.
புதிய ஊடக தளங்களின் உள்ளடக்கங்கள் குறித்த விவாதம் சங்க பரிவாரத்திற்கு ஒரு புதிய தகவல் தொடர்பு சவாலை உருவாக்கியுள்ளது. முகநூல், எக்ஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஒரு வலுவான அரசியல் தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்கிய பாரதிய ஜனதா கட்சிக்கு, இன்ஸ்டாகிராம் மற்றும் குறு காணொளிகளின் அரசியல் மொழியைக் கையாள்வது கடினமாக உள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியே ஒரு நகைச்சுவையான சமூக ஊடக நிகழ்வாகத் தொடங்கி, நகைச்சுவை, கிண்டல் மற்றும் பாப் கலாச்சாரக் குறிப்புகளைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு மற்றும் தேர்வு முறைகேடுகள் மீதான கோபத்தை வெளிப்படுத்தி, பின்னர் தெருப்போராட்டமாக உருவெடுத்தது.
இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் செங்குத்து காணொளிகள், சாதாரணமான உரையாடல்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் வடிவங்களை வெளிப்படையாகப் பயன்படுத்தத் தொடங்கினர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் இளைய தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில புதிய தலைமுறை ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தினர்.
இந்தச் சவால் என்பது ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு அரசியல் செய்திகளைக் கொண்டு செல்வதுடன் மட்டும் முடிவடைவதில்லை. இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் நகைச்சுவை, முரண், இயல்புத்தன்மை மற்றும் படைப்பாளர்களை மையமாகக் கொண்ட உள்ளடக்கங்களை ஊக்குவிக்கின்றன. இது பாரதிய ஜனதா கட்சி இதுவரை பயன்படுத்தி வந்த மத்தியமயமாக்கப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட செய்தியிடல் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தப் போராட்டமும் இணையத்தில் மீம்கள், காணொளிகள், கிண்டல்கள் மற்றும் போராட்டங்கள் மற்றும் காவல் துறை நடவடிக்கைகள் குறித்த இணைய விளையாட்டுகளை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், டெல்லியின் ரோஹினியில் நவம்பர் 29 அன்று ‘ராஷ்டிர வந்தனம்’ என்ற பெரிய நூற்றாண்டு விழா நிகழ்விற்கு சங்கம் தயாராகி வருகிறது. பிரிவு 23-ல் நடைபெறும் இந்த நிகழ்வில் பாகவத் உரையாற்றுவார் என்றும், இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஸ்வயம்சேவகர்களும் அழைப்பாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களைத் தவிர, எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராகக் கொந்தளிப்பைத் தூண்டிவிடும் இந்த நேரத்தில், இது ஒரு பலப் பரீட்சையாகவும் இருக்கும் என்று சங்கப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
