பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்கிற கே.தாமோதரன் (72), இன்று (25-10-26) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சமையல் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து செஃப் தாமு, கடந்த 2010ஆம் ஆண்டில் 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சமையல் கலையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பின் காரணமாக கடந்த 2025ஆம் ஆண்டில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இதனிடையே பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சமையல் நிகழ்ச்சி ஒன்றில் இவர், நடுவராக பங்கேற்று தமிழக மக்களிடம் அதிகளவில் பிரபலமானார். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாத காரணத்தால் சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (25-10-26) காலை காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு சமையல் கலைஞர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், செஃப் தாமுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, “பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் கே.தாமோதரனின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
