ஆவினில் 63 பொருட்கள் விலை நாளை முதல் உயர்கிறது.. நெய், வெண்ணெய், இனிப்பு லிஸ்ட் இதோ

சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது. நாளை முதல் ஆவின் பொருட்கள் விலை அதிகரிக்கவுள்ளது. மக்கள் அதிகம் வாங்கும் நெய், வெண்ணெய், இனிப்பு வகை பொருட்கள் விலை உயர்த்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை நவம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஆண்டு முழுவதும் ஓய்வில்லா உழைக்கும் மக்கள், தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். ஏற்கனவே விலை வாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆவின் நிறுவனத்தில் குறைந்த விலையில் நெய், வெண்ணெய் போன்றவை குறைந்த விலையில் கிடைக்கும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் ஆவினில் அதிகளவு பொருட்களை வாங்குவார்கள்.

இந்நிலையில் மூலப்பொருள் விலை உயர்வு, தயாரிப்பு கொள்முதல் செலவு உள்ளிட்ட செலவுகளால் நாளை முதல் ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது. ஆவின் 230க்கும் மேற்பட்ட பால் உப பொருட்கள் விற்பனையாகிறது. இவற்றில் 63 பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் வெண்ணெய், நெய், மோர், லெஸ்ஸி, தயிர், பிஸ்கட், இனிப்பு வகைகளில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வதால் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது

100 கிராம் ஆவின் நெய் பாட்டில் ரூ.10 உயர்ந்து 95 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய் ரூ.80 உயர்ந்து 770 ஆக அதிகரித்துள்ளது. அரைலிட்டர் நெய் ரூ.30 உயர்ந்து ரூ.390 ஆக அதிகரித்துள்ளது. 100 கிராம் வெண்ணெய் ரூ.10 உயர்ந்து ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. அரை கிலோ வெண்ணெய் விலை ரூ.45 உயர்ந்து 320 ஆக அதிகரித்துள்ளது. கால் கிலோ குலோப்ஜாமுன் விலை ரூ.15 உயர்ந்து 115 ஆக அதிகரித்துள்ளது. பால்கோவா ரூ.20 உயர்ந்து ரூ.150 ஆக அதிகரித்துள்ளது. 200 கிராம் ரசகுலா ரூ.10 அதிகரித்து ரூ.95 விற்பனையாகிறது.

மைசூர்பா விலையும் கால் கிலோ ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. 200 மில்லி லெஸ்ஸி விலையும் ரூ.3 அதிகரித்து 23 ஆக உயர்ந்துள்ளது. 200 மில்லி விற்பனையாகும் 10 வகை மில்க் ஷேக்களின் விலை ரூ.30 இல் இருந்து 35 ஆக உயர்ந்துள்ளது. 50 கிராம் ப்ரீமியம் கப் ரூ.5 இல் இருந்து 7 ஆகவும், ஒரு கிலோ தயிர் ரூ.120 இல் இருந்து 130 ஆக உயர்ந்துள்ளது. 200 மில்லி மோர் ரூ.8 இல் இருந்து 10 ஆகவும், பெட் பாட்டிலில் விற்கும் மோர் ரூ.12 இல் இருந்து 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.