இடைத்தேர்தலில் இடதுசாரிகள் ஆதரவு யாருக்கு? இன்று பிற்பகலில் வெளியாகும் முக்கிய முடிவு – வீரபாண்டியன் சொன்னது என்ன? – left parties support for the by elections to be announced this afternoon

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இடதுசாரிகள் யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், இடைத்தேர்தலிலும் அந்த ஆதரவு தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 25 அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது. மேலும், 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் அந்த 6 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.இந்த சூழலில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணிஎன்ற கூட்டணியின் கீழ் விசிக, காங்கிரஸ், முஸ்லிம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரிகள் ஆதரவு யாருக்கு?

ஏற்கனவே பெரும்பான்மைக்காக தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து இடதுசாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால், இடைத்தேர்தலிலும் அவர்கள் தவெகவுக்கு தங்களது ஆதரவை நீட்டிப்பார்களா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் வலுத்துள்ளது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த மு. வீரபாண்டியன், திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுடன் தங்களுக்கு எந்தவித பகைமுரணும் கிடையாது என்றும், பாஜக மட்டுமே தங்களின் அரசியல் பகைமுரண் என்றும் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பான தங்களது நிலைப்பாடு குறித்து விரைவில் தெளிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் பேச்சு குறித்து விளக்கம்

நேற்று திருமாவளவன் பேசியது தொடர்பாகவும் மு. வீரபாண்டியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் சித்தாந்த ரீதியாக தங்களுக்கு பகைமுரண் இல்லை என்றும், நட்பு முரண் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தார். விசிக ஒரு தனித்த அரசியல் இயக்கமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்த அரசியல் இயக்கமாகவும் செயல்பட்டு வருவதால், இரு கட்சிகளின் முடிவுகளும் வெவ்வேறாக இருக்கலாம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

திராவிட இயக்கம் குறித்து கருத்து

மேலும், இந்தியாவை இடதுசாரி அரசியலின் பக்கம் திருப்ப வேண்டும் என்ற நோக்கில், திராவிட இயக்கத்தின் தேவையையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகமு. வீரபாண்டியன்தெரிவித்துள்ளார்.அண்ணாவின் கொள்கைகள் மற்றும் பெரியாரின் கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட சித்தாந்தங்களை தாங்கள் எப்போதும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், முதலாளித்துவ சமூகத்திற்கு எதிரான அரசியல் மாற்றத்தில் இந்தக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசுக்கு முக்கியமான இடைத்தேர்தல்

தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஆதரவு அளித்து வரும் கட்சிகள் தங்களது ஆதரவை திரும்பப் பெற்றால், அது விஜய் அரசுக்கு அரசியல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

இந்த இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு யாருக்கு? உடைத்து பேசிய நயினார்!

இதனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலை தமிழக வெற்றிக் கழகம் மிக முக்கியமாக எடுத்துக்கொண்டு பணியாற்றி வருகிறது. இந்த சூழலில், இடதுசாரிகளின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

பிற்பகலில் நிலைப்பாடு அறிவிப்பு

இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை முடிந்த பிற்பகலில் இடைத்தேர்தல் தொடர்பான தங்களது நிலைப்பாடு அறிவிக்கப்படும் என மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.இதனால், இடதுசாரிகள் மீண்டும் தமிழக வெற்றிக் கழகத்துக்கே ஆதரவு அளிப்பார்களா அல்லது வேறு முடிவை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Source link