தமிழ்நாடு அரசியல் களத்தில் இடைத்தேர்தல் குறித்தான பரபரப்புகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பட்டதை தொடர்ந்து, அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் தேமுதிக இந்த இடைதேர்தல் குறித்து முடிவு எடுப்பதற்காக ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் தேமுதிக
சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் களமிறங்கி நிலையில் அவர் வெற்றி பெற்றார். இதனிடையில் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் அனைத்தும் அணி மாறிவிட்டன. ஆளுங்கட்சியான தவெக நோக்கி திமுக கூட்டணி கட்சிகள் சென்று விட்ட நிலையில், திமுக கூட்டணியிலே தேமுதிக நீடிக்கிறது.
திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
இதனிடையில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக தலைமை அறிவித்து விட்ட நிலையில், இதில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? திமுகவின் வேட்பாளர்களை ஆதரிக்குமா என்பதும் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதுக்குறித்து முடிவெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை
இது தொடர்பாக தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 16 ஆம் தேதி காலை பத்து மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தேமுதிகவின் 22 வது தொடக்க நாள் மற்றும் இரண்டு தொகுதி இடைத்தேர்தல் குறித்து முக்கியமான ஆலோசனை இந்த கூட்டத்தில் நடக்குமென கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
எனவே அனைத்து மாவட்ட செயலாளர்களும் தேமுதிகவின் ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் சட்டமன்றத்தில் தேமுதிக எம்எல்ஏவான பிரேமலதா விஜயகாந்தின் நடவடிக்கைகள் பலர் மத்தியிலும் கவனம் பெற்று வருகிறது. ஆளுங்கட்சியான தவெக அரசுக்கு எதிராக பல விமர்சனங்களையும் சட்டமன்றத்த்தில் அவர் முன்வைத்து வருகிறார்.
விஜய்யின் அழைப்பை நிராகரித்த பிரேமலதா விஜயகாந்த்
அதோடு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக தவெகவிடம் இருந்து தேமுதிகவுக்கும் அழைப்பு வந்ததாக தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த். இன்றைய முதல்வர் விஜய் அவர்களே தவெகவுக்கு ஆதரவு அளிக்க கேட்டதாகவும் கூறினார். ஆனால் ஒரு கூட்டணியில் போட்டியிட்டு விட்டு, தேர்தலுக்கு முன்பாக அணி மாறுவது சரியான அணுகுமுறை அல்ல. எனவே தேமுதிக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது என தெரிவித்தார்.
திமுக கூட்டணி ஜெயித்தாலும்…திமுகக்கு ஆட்சிக்கு வராது! BJP Kalyanaraman interview
இடைத்தேர்தலில் நிலைப்பாடு என்ன?
இதன் மூலமாக திமுக கூட்டணியில் தேமுதிக நீடிப்பதை உறுதி செய்தார். இதனிடையில் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான விடை வரும் 16 ஆம் தேதி தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
