மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தவெக வேட்பாளர்களாக அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக அவர்களுக்கு பதிலாக தவெகவினருக்கே இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும். அதிமுகவில் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படும். எனவே தவெகவினருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
தவெக வேட்பாளர்கள்
ஆனால் அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கே தவெக தலைமை இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் சில விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இதனிடையில் இவ்விவகாரத்தை தேர்தல் பரப்புரையில் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் கையில் எடுக்கும் என கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மின் தடை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து பரப்புரையில் பேசினாலும், குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும்.
எதிர்க்கட்சிகள் திட்டம்
இந்த இடைத்தேர்தல் என்பதே அவசியமற்றது. மக்கள் வரிப்பணத்தை தவெக வீணடிக்கிறது என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுராந்தகம், தாராபுரம் தொகுதி மக்களிடம் தவெக வேண்டாம் என நீங்கள் வாக்களித்தவர்கள் ராஜினாமா செய்து இப்போது மீண்டும் உங்களிடம் வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டுமென இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, அதிமுக பேசலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
விஜய் சமாளிக்க போவது எப்படி?
இதனால் எதிர்க்கட்சிகள் முன்வைக்க போகும் இந்த விமர்சனங்களை தவெகவும், முதல்வர் விஜய்யும் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதே நேரம் முதல்வர் ஜோசப் விஜய் பரப்புரை செய்தால் போதும். தவெக வெற்றி உறுதி என தவெகவினர் உறுதியாக நம்புகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இதே போன்று ஒரு கருத்தினை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளரான சத்தியபாமா, முதல்வர் ஜோசப் விஜய் கண்டிப்பாக தேர்தல் பரப்புரைக்கு வருவார் என தெரிவித்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கலுக்கு பின் பிரச்சாரம்
இதன் காரணமாக இன்னும் சில தினங்களுக்கு தேர்தல் பரப்புரைக்கான பணிகளை அரசியல் கட்சிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு பின்பாக பிரச்சாரம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் தாராபுரத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக மூன்றாம் இடத்தினை பெற்றது. இதனால் இந்த தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் எனவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதிமுகவின் வியூகம்
இதற்கிடையில் அதிமுக இந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகள் என்பதால், மீண்டும் அங்கு இரட்டை இலை சின்னமே வெற்றி பெற வேண்டும் என மூத்த நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர். அதோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலமாக, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதை தடுத்து நிறுத்த முடியும் எனவும் தலைமை கணக்கு போடுகிறது.
நாதக அறிவிப்பு
இதனால் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் திமுக, தவெக, அதிமுக கட்சிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில், நாதகவும் விரைவில் வேட்பாளரை அறிவிக்கவுள்ளது. இதனால் இந்த இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
