புதுடில்லி: ஓட்டு திருடப்பட்டதாகக் கூறி, நவம்பர் 1ம் தேதி டில்லியில் இண்டி கூட்டணி சார்பில் மெகா பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்களால் மத்திய அரசு அதிருப்தியில் இருக்கிறது. இண்டி கூட்டணியின் இந்தப் பேரணியும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், டில்லியில் உள்ள பாஜ தேசிய தலைமை அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். பாஜ தேசிய தலைவர் நிதின் நபின், தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், பொது செயலர் சுனில் பன்சால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் போராட்டத்தை எதிர்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. டிவி விவாதங்கள், சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த வியூகத்தை வகுப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
நவம்பர் 1ம் தேதி நடக்கும் இண்டி கூட்டணி பேரணியில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
