‘இதற்குத்தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டாங்களா?’: முதல் முறையாக விஜய் அரசு மீது பா.ஜ.க தேசிய தலைமை நேரடி அட்டாக்

ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திங்கள்கிழமை இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக்காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
 
தப்பி ஓட்டம் 
 
இதன்பின்னர் 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து சிறைக்காவலர்கள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ். பிரவீன் கவுதம் உத்தரவின்பேரில், தேக்கம்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. மாவட்ட சிறை அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவை சுற்றிவளைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விடிய விடிய தேடுதல் வேட்டை

போலீசாரின் இந்த தேடுதல் வேட்டையின்போது.,சிறைக்கு அருகில் ஒரு இருள் சூழ்ந்த பகுதியில் தப்பி ஓடிய கைதி பிரவீன்குமார்(வயது 25) பதுங்கி இருந்தார். போலீசாரை பார்த்தவுடன் அவர் சரண் அடைந்து விடுவதாக தெரிவித்தார். உடனே அவரை போலீசார் சிறைக்குள் அழைத்துச் சென்று அடைத்தனர். 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விடிய விடிய தேடுதல் வேட்டை நடந்தது. இதில் தப்பி ஓடிய ராஜா சிக்கந்தர் (24), ராஜ்குமார் (20) ஆகியோரை சிறைக்கு பின் பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். மற்றொரு கைதியான சிலம்பரசனை (24) திருமலாபுரம் விலக்கு பகுதியில் வைத்து கைது செய்தனர்.

மாற்றுத்திறனாளி கைதியான பிரசாந்த் (25) என்ற லிங்கப்பிரசாந்த் தேக்கம்பட்டியில் இருந்து க.விலக்கு நோக்கி ஆட்டோவில் பயணம் செய்தபோது நேற்று பகலில் போலீசார் துரத்திப் பிடித்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க டிரோன் பறக்கவிட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எம்.சுப்புலாபுரம்-அம்மச்சியாபுரம் இடையே உள்ள மலைப்பகுதியில் டிரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தியபோது அங்கு 8 பேர் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது. அவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ்.பிரவீன் கவுதம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

அங்கு பதுங்கி இருந்த கருப்பசாமி (25), தருண்குமார் (25), பாண்டிசெல்வம் (25), சபரிநாதன் (23), நிஷாந்த் (22), முத்து இளங்கோவன் (22), கார்த்திக்ராஜா (36), சேலைமுகிலேஸ்வரன் (28) ஆகிய 8 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைதானவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பி ஓடிய 17 பேரில், 13 பேரை 24 மணி நேரத்துக்குள் போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

17 கைதிகளும் கைது 

இந்த சூழலில் தப்பியோடிய கைதிகளில் மேலும் 2 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். இதனால், மொத்த கைது எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. தப்பியோடியவர்களில் மீதமுள்ள 2 பேரை தேடும் பணி நடந்து வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், 50-க்கும் மேற்பட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

 இந்நிலையில் தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகளில் எஞ்சிய இருவரும் தற்போது பிடிபட்டனர். மதுரையை சேர்ந்த சகோதரர்களான திருப்பதி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் இன்று தங்கள் வழக்கறிஞருடன் கூடலூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதன்படி நேற்று முன்தினம் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய நிலையில் அடுத்தடுத்து அனைவரும் பிடிபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

‘இதற்குத்தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டாங்களா?’ 

இந்நிலையில், முதல் முறையாக விஜய் அரசு மீது பா.ஜ.க தேசிய தலைமை நேரடியாக தாக்கிப் பேசி இருக்கிறது. இது தொடர்பாக அதன் சமூக வலைதள பக்கத்தில், “காங்கிரஸ் – த.வெ.க அரசு (Congress-TVK) ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்; தமிழ்நாடு முழுவதும் பல குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இதற்காகவா தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்தார்கள்?” என்று பா.ஜ.க கேள்வி எழுப்பி இருக்கிறது.  

Source link