சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி சுல்லான் மதன் கொலை 12 மணி நேரத்திற்குள் மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த மதன் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 18ஆம் தேதி மதியம், சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமங்கலத்தில், சிவகங்கை புதுப்பட்டியைச் சேர்ந்த சக்தி என்பவரின் மகன் சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி மதன் என்கிற சுல்லான் மதன் (வயது 26), என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து அவரது தந்தை சக்தி அளித்த புகாரின் அடிப்படையில், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள், திருமங்கலத்தைச் சேர்ந்த தவமணியின் மகன் பிரதீப் (28), மானாமதுரை, உடைகுளத்தைச் சேர்ந்த பூமிசங்கரின் மகன் பாலமுருகன் (19) மற்றும் மானாமதுரை, ஏ. விலாகுளத்தைச் சேர்ந்த பாலகுமாரின் மகன் பாபு (23) ஆகிய மூன்று குற்றவாளிகளைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்காக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த மதன் மீது மொத்தம் 15 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 13 வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையில் நிலுவையில் உள்ளன. அவர் நீதிமன்ற பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்திருந்தார். அவரால் பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினர் அவர் மீது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். கடந்த 30.09.2026 அன்று, சிவகங்கை வட்டாட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவரிடமிருந்து ஓராண்டு காலத்திற்கு நன்னடத்தைப் பிணையப் பத்திரம் பெறப்பட்டது. மேலும், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், உயிரிழந்த மதன் 01.10.2026 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இருப்பினும், அவர் 07.10.2026 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி, சிவகங்கை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவானது இன்னும் நிலுவையில் உள்ளது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு, சிவகங்கை நகர் காவல் நிலைய வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி, காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு நீதிமன்றத்தின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
