குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கோ அல்லது அவர்கள் மீதான வழக்குகளை நடத்துவதற்கோ தேவையான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை அரசு மறைக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தந்தையின் பெயரில் போலிப் புகார்கள்
வழக்கறிஞர் அபிஷேக் என்பவரின் தந்தை காணாமல் போயுள்ளார். இந்தச் சூழலில், அவரது தந்தையின் பெயரில் அபிஷேக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகப் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் புகார்கள், 2026 அக்டோபர் 6ஆம் தேதி மதுரை ரயில்வே மெயில் சர்வீஸ் (RMS) அஞ்சலகம் வழியாக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தனது தந்தை காணாமல் போயுள்ள நிலையில், அவரது பெயரைப் பயன்படுத்திப் புகார்கள் அனுப்பும் நபர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள அபிஷேக் விரும்பினார். இதற்காக, சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தில் பதிவான சி.சி.டி.வி காட்சிகளைப் பாதுகாத்து, அவற்றைத் தனக்கு வழங்க உத்தரவிடக் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். சி.சி.டி.வி காட்சிகள் கிடைத்தால், புகார்களை அனுப்பிய நபரை அடையாளம் காண முடியும் என்றும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.
அஞ்சலக விதிகளைச் சுட்டிக்காட்டிய அரசு தரப்பு
இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அஞ்சலகக் கையேட்டின் 152-வது விதியின்படி குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அஞ்சலகப் பதிவுகள் மற்றும் தகவல்களை வழங்க முடியும் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் மலையேந்திரன் தெரிவித்தார். குறிப்பாக, குற்றவியல் விசாரணை நடத்தும் காவல்துறை அதிகாரியின் எழுத்துப்பூர்வ உத்தரவு உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தகவல்களை வழங்க முடியும் எனவும் வாதிட்டார்.
‘இது தகவல் அறியும் உரிமைக்கான காலம்’
அப்போது நீதிபதி, ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 22-வது பிரிவின்படி, அந்தச் சட்டத்தின் விதிகளுக்கு முரணான பிற சட்டங்கள் மற்றும் விதிகளை விட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு முன்னுரிமை உண்டு. இதனால், அஞ்சலகக் கையேட்டில் உள்ள கட்டுப்பாடுகளை மட்டுமே காரணமாகக் கூறி தகவல்களை மறுக்க முடியாது. ஒருவரின் உரிமை மீறப்பட்டிருக்கும்போது, அதற்குக் காரணமான நபரை அடையாளம் காண அரசிடம் உள்ள ஆதாரங்கள் அவசியமாக இருந்தால், அவற்றை வழங்க மறுப்பது பாதிக்கப்பட்டவரின் சட்டரீதியான நடவடிக்கையைத் தடுக்கும்.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே தகவல்களை வழங்க மறுக்க முடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) நடைமுறையில் உள்ள தற்போதைய காலகட்டத்தில், தகவல்களை வழங்குவதைக் கட்டுப்படுத்தும் பழைய விதிகளை அரசு அதிகாரிகள் இயந்திரத்தனமாகப் பின்பற்றக் கூடாது’ என்று தெரிவித்தார்.
உத்தரவு
தொடர்ந்து, புகார்கள் காரணமாக மனுதாரரின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை அனுப்பிய நபரை அடையாளம் காண சி.சி.டி.வி காட்சிகள் அவசியம் என்றும் தெரிவித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரர் கோரிய விவரங்களையும் சி.சி.டி.வி காட்சிகளையும் பென் டிரைவில் இரண்டு வாரங்களுக்குள் வழங்குமாறு ரயில்வே மெயில் சர்வீஸுக்கு உத்தரவிட்டார்.
