இது பாசிசத்தின் உச்சம்; கார்த்திகாவை உடனே விடுதலை செய்யாவிட்டால் த.வெ.க அரசு எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும்: சீமான் எச்சரிக்கை

அண்மையில் நடைப்பெற்று முடிந்த தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் கார்த்திகா. இவர் அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இடைத்தேர்தலின்போது, தாராபுரம், வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள சென்றனர். அதற்கு அனுமதி மறுத்த போலீசார் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளதாகவும், இதனால் அந்தப் பகுதியில் அனுமதி வழங்கப்படாது எனவும் போலீசார் தெரிவித்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் பிரசாரத்தை தடுக்கும் விதத்திலேயே போலீசார் செயல்பட்டு வருவதாகவும், ஒருதலைபட்சமாக போலீசார் செயல்படுவதாகவும் கூறி, அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கார்த்திகா கைது

இந்நிலையில் முதலமைச்சர் பயணிக்கும் சாலையில் மறியலில் ஈடுபட்டது, காவல் நிலையத்தை முற்றுகையிட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கார்த்திகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் போலீசார் அவரையும், அவரது கணவரையும் கைது செய்தனர். விசாரணைக்காக தாராபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டனம் 

இந்த நிலையில், ‘அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்’ என்று குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம். 

தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே? 

மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா? 

நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, திருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா?

திராவிடக் கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் த.வெ.க அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதிகாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே!

உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. 

உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட த.வெ.க அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னுடைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.

பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.  

டி.டி.வி தினகரன் கண்டனம் 

இதேபோல், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட திருமதி கார்த்திகா உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் 6 பேர் கைது – எதிர்க்கட்சியினர் மீதான தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி கார்த்திகா, அவரது கணவர் உட்பட அக்கட்சியைச் சார்ந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் செல்லும் வழியில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதற்காகத் திருமதி கார்த்திகா மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளைக் காவல்துறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்த வேண்டிய காவல்துறையை, எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.

எனவே, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையைத் தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகப் பயன்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திடுவதோடு, திருமதி கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரின் மீதான கைது நடவடிக்கையையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தவெக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.” என்று அவர் கூறியுள்ளார். 

Source link