சுப. உதயகுமாரன்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களை பாபு (அப்பா) என்றும், மகாத்மா என்றும், தேசத்தந்தை என்றும் மக்கள்தான் அழைத்தார்களே தவிர, அவர் தன்னை ஒரு தலைவராகக்கூடப் பார்க்கவில்லை. காந்தி தன்னை ஒரு சாதாரண விவசாயியாகவே பார்த்தார். தென்னாப்பிரிக்காவில் பீனிக்ஸ் பண்ணை, டால்ஸ்டாய் பண்ணை போன்றவற்றைத் தொடங்கியது, இந்தியாவில் விவசாயிகளுக்காகப் போராட்டங்கள் நடத்தியது, மண்ணை உழுவதும், ராட்டைச் சுற்றுவதும் எளிய, கண்ணியமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான பொருளாதார நடவடிக்கைகள் என்று கருதியது என ஏராளமான எடுத்துக்காட்டுக்களைச் சொல்லலாம். குறிப்பாக 1922-ஆம் ஆண்டு அகமாதாபாத் நகரில் நடந்த தேசத்துரோக வழக்கு விசாரணையின்போது, காந்தி தன்னை ஒரு “விவசாயி மற்றும் நெசவாளர்” என்றே குறிப்பிட்டார்.
“தன்னைத் தானும் உணர்ந்துகொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா?” என்று கவிஞர் கண்ணதாசன் கேட்டதற்கிணங்க, காந்தி தன்னைத் தானே உணர்ந்துகொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவாறே, அவற்றை மக்களிடமும் பகிர்ந்துகொண்டார். தன்னுடைய ஆத்மப் பரிசோதனைகளை, ஆழமான உள்ளுணர்வுகளை, கண்டறிந்த உண்மைகளை எல்லாம் அவர் ஊருக்கும் சொல்லிக் கொண்டிருந்ததால், அவருடைய செயல்பாடுகள் வெறுமனே தன்னுடைய விடுதலைக்கான முயற்சிகளாக மட்டும் இருக்கவில்லை. எனவேதான் காந்தி இன்றும் ஒப்பாரும், மிக்காரும் இல்லா உலகத் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.
காந்தியின் தலைமைத்துவம் பற்றி என்னுடைய அமெரிக்க ஆசிரியர் கிளன் பெய்ஜ் (Glenn Paige) 1995-ஆம் ஆண்டு ஓர் அருமையான கட்டுரை எழுதினார். அரசியல் தலைமைத்துவம் என்பது ஆளுமைப் பண்புகள், சமூகப் பங்களிப்பு, அமைப்பாக்குதல், அரும்பணிகள், விழுமியங்கள், சூழ்நிலைகள் போன்ற பல்வேறு விடயங்களின் ஊடாடல்தான் என கிரேக்க அறிஞர் ப்ளூடார்க் (Plutarch) குறிப்பிடுவதை ஏற்றுக்கொண்டு, அவை ஒவ்வொன்றிலும் காந்தி எப்படி பிரகாசித்தார் என்று நிறுவினார் பெய்ஜ்.
செல்வாக்கான குடும்பப் பின்னணி, வெளிநாட்டுக் கல்வி, சமூகத்தில் உயர்ந்தநிலை என அனைத்து நலன்களும் வாய்க்கப் பெற்றிருந்த நிலையிலும், காந்தி ஏழைகளுக்காக, விவசாயிகளுக்காக, தொழிலாளர்களுக்காக, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக, சிறுபான்மையருக்காக, பெண்களுக்காக, நேரடி மற்றும் கட்டமைப்பு வன்முறைகளால் துன்புற்றவர்களுக்காகப் பணியாற்றினார். தன்னுடைய உள் குரல் எனும் மனசாட்சிக்கு செவிமடுத்தே இயங்குவது காந்தியின் தனித்தன்மையாக இருந்தது. அதேபோல, தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு வருங்காலவியல் அறிஞராகவும் அவர் மிளிர்ந்தார்.
காந்தி தலைமைத்துவத்தை ஆதிக்கமாகவோ, அதிகாரமாகவோ பார்க்காது, சேவையாக, பணிவாக, தார்மீக நேர்மையாகவே பார்த்தார். “ஒரு காலத்தில் தலைமைத்துவம் என்பது உடல்பலத்தைக் குறித்திருக்கலாம், ஆனால் இன்று அது மக்களோடு இணைந்து பணியாற்றுவதைத்தான் சுட்டுகிறது” என்றார் காந்தி. அவரோடு இயங்கிய சத்தியாக்கிரகிகள் ஒவ்வொருவரும் அவரவருக்கான உண்மையைத் தேர்ந்துகொள்ள விரும்பியதன் மூலம், காந்தி ஒரு பெரும் சனநாயகவாதியாகத் திகழ்ந்தார். பெரும்பாலானோர் காந்தியை மகாத்மா என்றும், பலர் அவர் ஒரு திறமைமிக்க அரசியல்வாதி என்றும், சிலர் வில்லன் என்றும் கருதினாலும், இந்தியச் சமூகத்தின் மீதான அவரின் தாக்கம் மிகப் பெரிதாகவே இருந்தது. இன்றளவும் காந்தியின் தாக்கம் இந்திய அரசியலில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.
காந்தியத் தலைமையின் முக்கியக் கூறுகளைப் பட்டியலிடுவோம்:
முன்னுதாரண வழிநடத்தல்: ஒரு தலைவர் தான் காண விரும்பும் மாற்றத்தை, மற்றவர்களை ஏற்றுக்கொள்ளப் பணிப்பதற்கு முன்னால் தானே ஏற்று வாழ வேண்டும்.
சேவகத் தலைமை: தன்னுடைய அதிகாரம், நல்வாழ்வை விட ஒட்டுமொத்தச் சமூகத்தின் மற்றும் மிகவும் பலவீனமானவர்களின் தேவைகளை முன்னிலைப்படுத்த வேண்டும். பொதுமக்களோடு ஒன்றுகலந்து, அவர்களை ஆள்பவராக அல்லாமல், அவர்களுக்குத் தொண்டு செய்யும் சேவகராக இருக்க வேண்டும்.
தார்மீக அதிகாரம்: தலைவரின் செல்வாக்கும், அதிகாரமும் அவரது உண்மையிலிருந்தும், உள உறுதியிலிருந்தும் வருமே தவிர, பயங்கரம், வன்முறை, கட்டாயப்படுத்துதலில் இருந்தல்ல.
கட்டளையல்ல, உத்வேகம்: சக்திமிக்கத் தலைவர் பிறருக்கு ஆணைப் பிறப்பிப்பதைவிட அவர்களுக்கு சுயமரியாதை, உயரிய நோக்கம், அறநெறிப் பண்புகள் போன்றவற்றை வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
இணக்கமல்ல, உளச்சான்று: அனைவரின் இணக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பணியாற்றினாலும், தன்னுடைய மனசாட்சியின் குரலுக்கும் உண்மையாக இருக்க வேண்டும்.
உண்மை மற்றும் மென்முறை: தகராறுகளைத் தீர்ப்பதற்கும், சமூக அநீதிகளை எதிர்ப்பதற்கும் சத்தியாகிரகம் எனும் சட்டகத்தைப் பயன்படுத்த வேண்டும்.
மீள்தன்மையும், விடாமுயற்சியும்: நெடியப் போராட்டங்களின் போதும், சிறைவாசத்தின்போதும், அரசியல் அழுத்தத்தின் போதும் பெரும் மனவலிமையையும், உறுதிப்பாடும் கொண்டிருக்க வேண்டும்.
இக்கூறுகளைப் பெற்றவர்தான் காந்தியத் தலைவர், காந்தியின் தலைவர்!
நவீன இந்தியாவின் சமூக-பொருளாதார-அரசியல் அரங்கின் நட்டநடுவில் அட்டகாசமாய் அமர்ந்திருக்கும் அபாரமான யானைதான் மகாத்மா காந்தி. யானையின் ஒவ்வொரு பாகத்தையும் தனியாகத் தொட்டு நிற்கும் பார்வையற்றோர் முழுப் புரிதல் கொண்டவர்கள் அல்லர். யானையை அப்பாகங்களின் முழுமையாகப் பார்க்க வேண்டும். ஒரு பாகன்போல!
பாகங்கள் பலவிதம். அவற்றின் எண்ணிக்கையோ ஆயிரமாயிரம். பார்ப்பவரின் பின்புலம், பார்வையின் தனித்துவம், பார்ப்பதன் நோக்கம் என ஏராளமான அம்சங்கள் பொதிந்து கிடப்பதாலும், அவை முழுப் புரிதலை கடினமாக்குவதாலும், நம்மில் பலர் பாகப் புரிதலையே பாரியப் புரிதலாக ஆக்கிக் கொள்கிறோம்.
யானையைப் பாகன்போலப் பார்ப்பதுதான் சிறப்பு. அவர் தரைமீது நின்று யதார்த்தமாகவும் பார்க்கிறார், அதன் தலைமீது அமர்ந்து தத்துவார்த்தமாகவும் பார்க்கிறார். தரைமீது நிற்கும்போது, காந்தியின் மதப்பற்று, தூய்மைவாதம், துறவுநிலை போன்றவை நம்மை மிரட்சி கொள்ளச் செய்கின்றன. ஆனால் தலைமீது அமரும்போது காந்தீயம் நம் முன்னே பரந்து விரிகிறது.
உண்மை, உடலுழைப்பு, எளிமை, இயற்கைப் போற்றல், தொழிற்கல்வி, தற்சார்பு, ஆத்மப் பரிசோதனை, கிராம நலன், எளியோர் நலம், சமத்துவம், சுயாட்சி, மாந்தநேயம், சத்யாக்கிரகம், சர்வோதயம், அகிம்சை, அறப்போர், விடுதலை என காந்தீயம் படர்ந்து வியாபிக்கிறது. ஆனால் இவை அனைத்தையும்விட, காந்தியின் ஆகப்பெரும் தனிச்சிறப்பு என்பது வருங்காலத்தைக் கருத்திற்கொண்டு வகுக்கும் செயல்பாடுகள்தான். “அறிவுடையார் ஆவதறிவார்” என்கிறது வள்ளுவம். அந்த ஆவதறிந்த காந்தியைப் பார்ப்பது மிகவும் பயனளிக்கும்.
ஆனால் இந்திய/தமிழகப் புரட்சியாளர்களுக்கு, முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கு மூன்று, நான்கு தலைவர்களை மட்டுமே தெரியும். அவர்களைப் பொறுத்தவரை, மகாத்மா காந்தி என்றொருவர் பிறக்கவுமில்லை, போராடவுமில்லை, எழுதவுமில்லை, இயங்கவுமில்லை. அவர் பழமைவாதி, பிற்போக்குவாதி, புரட்சி, வர்க்கப் போர், வெட்டு, குத்து, கொளுத்து என்றெல்லாம் முழங்கவில்லை.
எந்தவொரு தலைவரையும் எடுத்துக் கொள்வோம். அவரை அற்புதமான முற்போக்குவாதியாகவும், கடைந்தெடுத்த பிற்போக்குவாதியாகவும் சித்தரிக்க முடியும். பார்க்கும் பார்வையும், முன்னிறுத்தும் முறையும், கதையாடல் வகையுமே தீர்மானிக்கின்றன.
காந்தி என்றொருவர் நம்மிடையே பிறந்ததையே மறந்தால், அவர் தேர்ந்த தலைவரல்ல என்று மறுத்தால், அவரது அறவழி எனும் பேராயுதத்தை மறைத்தால், வன்மமும், வன்முறையுமே இனிவரும் காலங்களில் பொதுவாழ்வு முறைகளாகும். இந்த பாசிச வன்முறை நாளடைவில் நம் அனைவரையும் அழித்தொழிக்கும். இந்த வன்முறையை, அக்கிரமத்தை, சமூகத் தகர்ப்பையே வேண்டி விரும்பி அரசியல் செய்யும் சில பாசிச அராஜகவாதிகளின் கைகளுக்குள் நாம் சென்று சிக்கிக் கொள்வோம்.
புத்தன், இயேசு, நபிகளையே குறை சொல்கிறார்கள் என்றால், காந்தியிடம் குற்றம் கண்டுபிடிக்க ஏராளமான விடயங்கள் இருக்கின்றனதான். ஆனால் அந்த உண்மையான, நேர்மையான, எளிமையானத் தலைவன் நமக்குக் கையளித்துச் சென்றிருக்கும் ‘அறவழிப் போராட்டம்’ எனும் பேராயுதமே நாம் அனைவரும் உய்வடைய உகந்த வழி, ஒரே வழி!
வள்ளுவருக்கு, வள்ளலாருக்கு, அண்ணல் அம்பேத்கருக்கு மதவாதிகளால் காவியடிக்க முடியுமென்றால், காந்திக்கு நம்மால் சிவப்படிக்க முடியும். சமூக அநீதிகளை, பொருளாதார அநியாயங்களை, அரசியல் அக்கிரமங்களைத் தட்டிக்கேட்போம். அறவழியில் போராடுவோம், அதனைக் காலத்திற்கேற்பச் செழுமைப்படுத்துவோம், ஆக்கத்திறனோடு மாற்றியமைப்போம் என்று நின்ற தலைவன் ஒரு சிவப்புச் சிந்தனையாளன்தானே?
காந்தியை மறுவாசிப்புச் செய்வோம். நம் பிள்ளைகளுக்கு ஒரு சிவப்புக் காந்தியைச் சொல்லிக் கொடுப்போம். நாம் இதனைச் செய்யவில்லை என்றால், காந்தி காலியாவதோ, காவியாவதோ தவிர்க்கப்பட முடியாதது. நாம் ஓர் அற்புதமான புரட்சிப் பேராயுதத்தை இழப்பது தடுக்கப்பட முடியாதது.
(கட்டுரையாளர் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்; பச்சைத் தமிழகம் கட்சியின் தலைமைப் பணியாளர்.)
