இந்தியா 'ஏ' அணி முன்னிலை: 199 ரன் விளாசினார் தேவ்தத் படிக்கல்

லிங்கன்: முதல் டெஸ்டில் தேவ்தத் படிக்கல் 199 ரன் விளாச, இந்தியா ‘ஏ’ அணி முன்னிலை பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்தியா ‘ஏ’ அணி, மூன்று போட்டிகள் (4 நாள் ஆட்டம்) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட், லிங்கனில் உள்ள பெர்ட் சட்கிளிப் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ 113/10, நியூசிலாந்து ‘ஏ’ 317/10 ரன் எடுத்தன. ஆட்டநேர முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 2வது இன்னிங்சில் 106/2 ரன் எடுத் திருந்தது. படிக்கல் (56), சுதர்சன் (39) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று, 3ம் நாள் ஆட்டம் நடந்தது. சாய் சுதர்சன் அரைசதம் விளாசினார். ஜேடன் லெனாக்ஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய தேவ்தத் படிக்கல், 128 பந்தில் சதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 215 ரன் சேர்த்த போது சுதர்சன் (91 ரன், 12X4) அவுட்டானார். கேப்டன் துருவ் ஜுரெல் (2) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய தேவ்தத் படிக்கல், 199 ரன்னில் (3X6, 24X4) சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாகி, இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஆனால் பந்து, பேட்டில் படவில்லை என படிக்கல் அதிருப்தி தெரிவித்தார்.

அடுத்து வந்த யாஷ் ரத்தோட் (66), வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்தனர். அன்ஷுல் கம்போஜ் (23), அகிப் நபி (38) ஓரளவு கைகொடுத்தனர். ஆட்டநேர முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 2வது இன்னிங்சில் 488/8 ரன் எடுத்து, 284 ரன் முன்னிலை பெற்றிருந்தது. வாஷிங்டன் (51) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து ‘ஏ’ சார்பில் கிறிஸ்டியன் கிளார்க், ஜாக் கிப்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

வருகிறார் பும்ரா

நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (நவ. 19-23ல் வெலிங்டன், நவ. 27-டிச. 1ல் கிறைஸ்ட்சர்ச்) பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் விதமாக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட், நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 3வது டெஸ்ட் போட்டியில் (நவ. 7-10, இடம்: லிங்கன்) இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாட உள்ளனர். தற்போது இருவரும், பெங்களூருவில் உள்ள பி.சி.சி.ஐ., சிறப்பு மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ராகுல், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் உள்ளிட்ட முன்னணி இந்திய வீரர்கள் சிலர் இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாடி வருகின்றனர்.

Source link