ஜலந்தர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி முதல் போட்டியில் கோல் மழை பொழிந்த இந்திய அணி 13-–0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 9வது சீசன் நேற்று பஞ்சாப்பில் துவங்கியது. ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, சீனா, வங்கதேசம், ஜப்பான், மலேசியா, தென் கொரியா என, 6 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘டாப்–4’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.
இந்திய அணி நேற்று தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. போட்டி துவங்கிய 2வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், முதல் கோல் அடித்தார். அடுத்து ஷிலானந்த் (15), அபிஷேக் (18), நிலகண்ட சர்மா (26) என ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு கோல் அடித்தனர். முதல் பாதியில் இந்தியா 6–0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இம்முறை தில்பிரீத் சிங் (43, 44), மீண்டும் ஹர்மன்பிரீத் சிங் (44), ஜுக்ராஜ் (46) என வரிசையாக கோல் அடித்தனர். மன்தீப் சிங் (4, 10, 54) ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து கைகொடுத்தார்.
முடிவில் இந்திய அணி 13–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் மலேசிய அணி 5–4 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஜப்பான் 3–2 என தென் கொரியாவை வென்றது.
