திருப்பூர்: ஸ்பெயினில் நடந்த, 10-வது பார்சிலோனா டெக்ஸ்டைல் எக்ஸ்போ கண்காட்சியில், ஏ.இ.பி.சி., எனப்படும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் பங்கேற்றுள்ளது.
நேற்று முன்தினம் (21-ம் தேதி) இக்கண்காட்சி தொடங்கியது. இதில், 32 இந்திய நிறுவனங்களுடன் ஆயத்த ஆ டை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் பங்கேற்றது. பாரம்பரியம், புதுமையான வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்திய அரங்கை பார்சிலோனா இந்திய துணை துாதர் இன்பசேகர் சுந்தரமூர்த்தி, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தனர். துணை துாதரக அதிகாரி ஆர்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்தியக் குழுவுக்கு தலைமையேற்ற சக்திவேல், துாதருடன் இணைந்து அரங்குகளை பார்வையிட்டு ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடினார்.
‘சர்வதேச உற்பத்தியாளர்கள், வினியோகஸ்தர்கள், வாங்குபவர்களை ஒருங்கிணைத்த இக்கண்காட்சி, ஐரோப்பிய வர்த்தகர்களுடன் நேரடி தொடர்பு மற்றும் நீண்டகால கூட்டாண்மைக்கு வாய்ப்பு வழங்குகிறது.
‘இந்திய ஆடை உற்பத்தித் திறன், தரம், புதுமைகளை உலகளவில் எடுத்துரைத்து, ஏற்றுமதியை மேம்படுத்தவும், இந்திய, ஸ்பெயின் வர்த்தக உறவை வலுப்படுத்தவும் தொடர்ந்து செயல்படுவோம்’ என ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.
