ராய்ப்பூர்: முதல் ‘டி–20’ போட்டியில் இந்திய பெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இது, கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவின் முதல் வெற்றியாக அமைந்தது.
இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. நேற்று, சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் முதல் போட்டி நடந்தது.
இந்திய ‘லெவன்’ அணியில் ‘மிடில்–ஆர்டர் பேட்டர்’ நிக்கி பிரசாத் அறிமுகமானார். இந்திய அணியின் முழுநேர கேப்டனாக முதல் முறையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, ‘டாஸ்’ வென்று ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
ஜிம்பாப்வே அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
கிராந்தி கவுட் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் பிசா ‘டக்–அவுட்’ ஆனார். மற்றொரு துவக்க வீராங்கனை கெலிஸ், கிராந்தி, அருந்ததி ரெட்டி ஓவரில் தலா 2 பவுண்டரி அடித்தார். ஜிம்பாப்வே அணி 10 ஓவரில், 60/1 ரன் எடுத்திருந்தது.
ஸ்ரீசரணி ‘சுழலில்’ முபாசிக்வா (16) சிக்கினார். அருந்ததி ‘வேகத்தில்’ கெலிஸ் (42) போல்டானார். அருந்ததி வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார் ஷார்ன் மேயர்ஸ். நந்தினி சர்மா வீசிய கடைசி ஓவரில் நியாஷா குவான்சுரா (9), மிஷெல் மாவுங்கா (0) ஆட்டமிழந்தனர்.
ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 114/5 ரன் எடுத்தது. மேயர்ஸ் (43), முகேரி–திரிபானோ (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் நந்தினி 2 விக்கெட் கைப்பற்றினார்.
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா (9), அனுஷ்கா சர்மா (4), ஹர்மன்பிரீத் கவுர் (1), ஷபாலி வர்மா (4) ஏமாற்றினர். இந்திய அணி 19/4 ரன் எடுத்து திணறியது. பின் இணைந்த நிக்கி பிரசாத், தீப்தி சர்மா ஜோடி கைகொடுத்தது.
பிரான்சிஸ்கா சிபரே வீசிய 7 வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் நிக்கி. மறுமுனையில் அசத்திய தீப்தி, ஒலிண்டர் வீசிய 10வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்த போது தீப்தி (49) அவுட்டானார். ரிச்சா கோஷ் (7) நிலைக்கவில்லை. டென்டாய் மகுஷா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய நிக்கி வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 15.4 ஓவரில் 116/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நிக்கி (39), அருந்ததி (2) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றது.
