டர்பன்: முதல் ‘டி-20’ போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. டர்பனில் முதல் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (13) சோபிக்கவில்லை. ஷைபாலி வர்மா (34), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (36) ஓரளவு கைகொடுத்தனர். ரிச்சா கோஷ் (5), காஷ்வீ (10), அருந்ததி ரெட்டி (3), ஷ்ரேயங்கா பாட்டீல் (1) ஏமாற்றினர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை தந்தார். இந்திய அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்தது. ஹர்மன்பிரீத் (47), தீப்தி சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு சுனே லுாஸ் (13), தஸ்னிம் பிரிட்ஸ் (10) நிலைக்கவில்லை. கேப்டன் லாரா (55) அரைசதம் கடந்தார். தென் ஆப்ரிக்க அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அன்னெரி டெர்க்சன் (44), டிரையன் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரோகித்தை முந்திய ஸ்மிருதி
சர்வதேச ‘டி-20’ அரங்கில் அதிக ரன் குவித்த இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை (4231 ரன், 159 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார் ஸ்மிருதி மந்தனா (4244 ரன், 161 போட்டி). மூன்றாவது இடத்தில் கோலி (4188 ரன், 125 போட்டி) உள்ளார்.
* அதிக ரன் எடுத்த வீரர்/வீராங்கனைகள் வரிசையில் 3வது இடம் பிடித்தார் ஸ்மிருதி. முதலிரண்டு இடங்களில் நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ் (4717 ரன், 181 போட்டி), பாகிஸ்தானின் பாபர் ஆசம் (4596 ரன், 145 போட்டி) உள்ளனர். இப்பட்டியலில் 4, 5வது இடத்தில் ரோகித், கோலி உள்ளனர்.
