இந்திய பெண்கள் 'ஹாட்ரிக்': ஒருநாள் கோப்பை வென்றது

வதோதரா: மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

இந்தியா வந்த ஜிம்பாப்வே பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நேற்று, வதோதராவில் 3வது போட்டி நடந்தது. இந்திய ‘லெவன்’ அணியில் ரிச்சா கோஷ், தேஜல், ஸ்ரீசரணி நீக்கப்பட்டு யாஸ்டிகா பாட்யா, ஹர்லீன் தியோல், கிராந்தி கவுட் இடம் பிடித்தனர்.

வைஷ்ணவி அசத்தல்

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஜிம்பாப்வே அணிக்கு லோரின் பிரி (0), சிபே முகேரி-திரிபானோ (4), பிசா (1) ஏமாற்றினர். முபசிக்வா (37), கேப்டன் ஜோஸ்பின் நிகோமோ (35), துருரு (20) ஆறுதல் தந்தனர். ஜிம்பாப்வே அணி 39.5 ஓவரில் 131 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா 5, கிராந்தி கவுட், சயாலி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

பிரதிகா அபாரம்

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு யாஷ்திகா பாட்யா முதல் பந்தில் ‘டக்-அவுட்’ ஆனார். ஹர்லீன் தியோல் (19) நிலைக்கவில்லை. பின் இணைந்த பிரதிகா ராவல், ஷபாலி வர்மா ஜோடி நம்பிக்கை தந்ததது. அபாரமாக ஆடிய பிரதிகா, 47 பந்தில் அரைசதம் கடந்தார். ஒலிண்டர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஷபாலி, அரைசதம் கடந்து வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணி 17 ஓவரில் 133/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பிரதிகா (59 ரன், 56 பந்து, 3X6, 4X4), ஷபாலி (51 ரன், 26 பந்து, 3X6, 6X4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் வைஷ்ணவி வென்றார். தொடர் நாயகி விருதை இந்தியாவின் பிரதிகா (220 ரன்) கைப்பற்றினார்.

Source link