புதுடில்லி: வணிகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டவதற்கு டில்லியில் உள்ள ரஷ்ய தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த எம்.வி. கோல்டன் லியோ என்ற கப்பல் தாக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில், 5 இந்தியர்கள் உட்பட 17 பணியாளர்கள் கப்பலில் இருந்தனர். நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மத்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்தது.
”வர்த்தகக் கப்பல்களைக் குறிவைப்பதும், அப்பாவிப் பொதுமக்களான கப்பல் ஊழியர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதும், கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிப்பதும் கண்டிக்கத்தக்கது. அவை தவிர்க்கப்பட வேண்டும்” என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக டில்லியில் உள்ள ரஷ்ய தூதருக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.
ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்திய மாலுமிகள் உயிரிழந்த முதல் சம்பவம் இதுவாகும். சமீப வாரங்களில் ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஆறுக்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் உயிரிழந்தது குறித்து, ஏற்கனவே ஈரான் மற்றும் அமெரிக்காவிடம் இந்தியா கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
