இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் பங்கு வீழ்ச்சி

புதுடில்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் பங்கு, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 67 – 68 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் இல்லாத அளவுக்கு இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. மெமரி சிப்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததால், சீன நிறுவனங்கள் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல்களின் உற்பத்தியை குறைத்துள்ள நிலையில் அவற்றின் சந்தை பங்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்ப சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஓம்டியா’ கணிப்பின்படி, கடந்த காலாண்டில் சீன பிராண்டுகளின் சந்தைப் பங்கு 68 சதவீதமாக இருந்தது. இதற்கு முந்தைய காலாண்டில் இது 71 சதவீதமாகவும், கடந்த ஆண்டு இதே காலத்தில் 75 சதவீதமாகவும் இருந்தது. சீன நிறுவனங்களின் சந்தைப் பங்கு அதிகபட்சமாக 2020 ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 80 சதவீதத்தை எட்டியிருந்தது.

மற்றொரு ஆய்வு நிறுவனமான கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் கணக்கின்படி, செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் சீன பிராண்டுகளின் சந்தைப் பங்கு 67 சதவீதமாக இருந்தது. 2019 ஜனவரி – மார்ச் காலாண்டுக்கு பிறகு பதிவான மிகக் குறைந்த அளவு இதுவாகும்.

விவோ, ஓப்போ, ஷாவ்மி போன்ற சீன நிறுவனங்கள், மெமரி சிப் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படும் குறைந்த விலை ஸ்மார்ட்போன் பிரிவில் மாடல்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. இதனால், விலை குறித்து அதிக கவனம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய, லாவா, ஏஐ பிளஸ் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இந்த வாய்ப்பு அதிகரித்துள்ளதாக துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link