“இந்த ஆட்சி நீதிமன்றத்தையும், சட்டத்தையும் மதிப்பதில்லை” – சேகர்பாபு பேட்டி!

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் இன்று (26.10.2026) கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, “இந்த ஆட்சி நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை, சட்டத்தையும் மதிப்பதில்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. யாரையும் அலட்சியப்படுத்தாமல் இல்லை; பத்திரிகையாளர்களைக்கூட அலட்சியப்படுத்துகிறது. இந்த ஆட்சி எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த அடக்குமுறைகளைக் கடந்துதான் திராவிட முன்னேற்றக் கழகம் 78 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. ஆகவே, இதுபோன்ற அடக்குமுறைகள் தொடருமேயானால், அவை எவ்வளவு காலம் தொடர்ந்தாலும், அவற்றைச் சட்டப்படி சந்திப்பதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் நிற்கும். முதலில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகு, நேராக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத்தான் வாகனத்தை எடுத்தார்கள். நீதிமன்றத்தில் நீதிபதியும் காத்திருக்கிறார். வழக்கறிஞரும் காத்திருக்கிறார். ஆனால், சுற்றிச் சுற்றி வந்து மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

உள்ளே என்ன நடக்கிறது என்பது வெளியே இருக்கின்ற ஊடகங்களுக்கும் தெரியாது; எங்களுக்கும் தெரியாது. அவரைத் தனிமையில் வைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே விசாரணை முடிந்த பிறகு, மருத்துவச் சான்றிதழில் உடல்நிலை தகுதி உறுதி செய்யப்பட்ட பின்னர், நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதுதான் வழக்கம். ஆனால், இந்த ஆட்சியில் அனைத்துமே சட்டத்திற்குப் புறம்பாகவும், நீதிக்கு விரோதமாகவும் இருக்கின்றன. அவரை அழைத்துச் செல்வதற்காக வேண்டுமென்றே இப்படி சுற்றிச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கலைஞர் பாணியில் சொன்னால், ‘அநீதி வீழும்; அறம் வெல்லும்!’. இன்றைக்குக் காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது. இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. அன்பில் மகேஷ் பொறுப்புள்ளவர். அவரது தாத்தா காலத்திலிருந்து, தந்தையின் காலத்திலிருந்து தொடர்ந்து அரசியலில் பயணித்து வருபவர். அவர் எங்கும் ஓடி ஒளிந்து கொள்ள மாட்டார்; நாடு விட்டு நாடு சென்றுவிட மாட்டார். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்தார்.

அதற்குப் பிறகும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்லாமல் வேறு என்ன பெயர் வைப்பது? நிபந்தனை ஜாமீன்தானே ரத்து செய்யப்பட்டது? அவரைக் கைது செய்யச் சொல்லி எங்கே உத்தரவிட்டிருக்கிறார்கள் என்பது  குறித்து எனக்குத் தெரியாது” எனத் தெரிவித்தார்.