ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் மக்கள் தங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்களை வெளிநாடுகளிலிருந்து துபாய்க்கு சுற்றுலா வர அழைத்தால், 3,000 திர்ஹாம், இந்திய மதிப்பில் சுமார் ரூ.79,000 மதிப்புள்ள சிறப்புப் பரிசுகளை வழங்கும் புதிய திட்டத்தை துபாய் அரசு அறிவித்துள்ளது. துபாயின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த ‘துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை’ “சிட்டி அம்பாசிடர் புரோகிராம்” (City Ambassador Programme) என்ற இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
- நீங்கள் அழைக்கும் விருந்தினர்கள் துபாய்க்கு வந்து சென்ற பிறகு, உங்களுக்கு துபாய் மதிப்பில் 3,000-க்கும் அதிகமான மதிப்புள்ள சலுகை பேக்கேஜ் வழங்கப்படும்.
- இலவச ஹோட்டல் தங்குமிடம்
- உணவகச் சலுகைகள்
- சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுக் கட்டணச் சலுகைகள்
- போக்குவரத்துச் சலுகைகள் ஆகியவை அடங்கும்.
- ‘W துபாய்’, ‘லீ மெரிடியன்’, ‘கேரீம்’ (Careem), ‘ஹலா’ (Hala), ‘ஐ.ஹெச்.ஜி ஹோட்டல்ஸ்’ போன்ற பிரபல நிறுவனங்கள் இந்தச் சலுகைகளை வழங்க இணைந்துள்ளன.
முக்கிய தேதிகள் மற்றும் காலக்கெடு
- விருந்தினர்கள் வரும் காலம்: ஜூலை 20, 2026 முதல் அக்டோபர் 31, 2026 வரை துபாய்க்கு வர வேண்டும்.
- திட்டம் முடியும் நாள்: டிசம்பர் 31, 2026 வரை இந்தச் சலுகைகளைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.
யார் இதில் பங்கேற்கலாம்?
18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐ.டி (Emirates ID) வைத்திருப்பது கட்டாயம்.
அமீரகத்திற்கு வெளியே வசிப்பவராக இருக்க வேண்டும். யு.ஏ.இ குடியிருப்பாளராக இருக்கக் கூடாது.
விசா: வருகை தரும் விருந்தினர் செல்லுபடியாகும் சுற்றுலா விசா அல்லது ‘விசா ஆன் அரைவல்’ (Visa on Arrival) பெறத் தகுதியுடையவராக இருக்க வேண்டும்.
பயணம்: விமானம், கப்பல் அல்லது சாலை வழியாக பயணித்து துபாய் வந்தடையலாம்.
சலுகைகளைப் பெறுவது எப்படி?
உங்கள் விருந்தினர்கள் துபாய்க்கு வருவதற்கு முன்பாகவே, அவர்களின் விவரங்களை ஆன்லைன் பரிந்துரைப் படிவத்தில் (Nomination Form) பதிவிட வேண்டும்.
உங்கள் விருந்தினர் துபாய்க்குள் நுழையும் போது, கணினி மூலம் அது தானாகவே சரிபார்க்கப்படும்.
சரிபார்ப்பிற்குப் பிறகு, உங்கள் பரிசு பேக்கேஜ் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான விவரங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
ஒரு முறை விண்ணப்பிக்கும் போது 5 நபர்கள் வரை பரிந்துரைக்கலாம். ஒரு நபர் இந்த பிரச்சாரக் காலத்தில் அதிகபட்சமாக 3 பரிசு பேக்கேஜ்களைக் கோர முடியும்.
இத்திட்டத்தின் நோக்கம்
துபாய் ஏற்கனவே உலகளவில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முன்னணி நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அங்கு வாழும் மக்களையே நகரின் தூதர்களாக மாற்றி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாகச் சுற்றுலாவை மேலும் ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
