அமெரிக்காவில் வேலை இழக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகை காலத்தை ரத்து செய்ய அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்ட வரைவு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டு, பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. இதன் மூலம் எச்-1பி, எல்-1 உள்ளிட்ட பல்வேறு விசாக்களில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தற்போது நடைமுறையிலிருக்கும் விதிகளின்படி, எச்-1பி விசாவில் உள்ள ஒருவர் வேலையை இழந்தால், அவர் வேறு நிறுவனத்தில் புதிய வேலை தேடி கொள்ளவோ அல்லது தனது விசா பிரிவை மாற்றிக் கொள்ளவோ 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், வேலை பறிபோன அடுத்த கணமே சம்பந்தப்பட்ட பணியாளர் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும். மீண்டும் அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும், அவர்கள் சொந்த நாட்டிற்குச் சென்று தூதரகங்கள் மூலமாகவே புதிய விசா நடைமுறைகளைத் தொடங்க முடியும்.
2016-ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சலுகை விதி, திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வேலைப் பாதுகாப்பையும், பிற நிறுவனங்களுக்கு மாறுவதற்கான நெகிழ்வுத் தன்மையையும் வழங்கி வந்தது. தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம் இந்த விதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலைவாய்ப்பு முடிவடைந்த பின்னரும் பணியாளர்கள் அமெரிக்காவில் தங்குவதைத் தடுத்து, விசா விதிமுறைகளை மேலும் கடுமையாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த புதிய மாற்றத்தால் வேலை இழக்கும் பணியாளர்கள் உடனடியாக வெளியேறாவிட்டால், அவர்களை கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான ‘நோட்டீஸ்’ அனுப்பப்படும் அபாயமும் உள்ளது. அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் எச்-1பி விசாவில் பணியாற்றி வரும் நிலையில், இந்த அறிவிப்பு அங்குள்ள இந்திய சமூகத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் பணி பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Post
Fri Sep 11 , 2026
இந்தியாவின் தலைமையில் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் (செப்.13 ஆகிய தேதிகளில்) நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள் மற்றும் சுமார் 1,300 சர்வதேசச் செய்தியாளர்களுக்கு, இந்தியப் பாரம்பரியத்தையும் கைவினைப் பொருட்களையும் பறைசாற்றும் வகையில் 9 சிறப்புப் பொருட்கள் அடங்கிய அன்புப் பரிசுப் பை வழங்கப்படுகிறது. இந்த சிறப்புப் பையில் இந்தியாவின் உணவுப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், […]

