டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ‘சலோ சன்சாத்’ (Chalo Sansad) பேரணியின்போது ஏற்பட்ட தடியடி மற்றும் மோதலில், அவுட்லுக் (Outlook) நிறுவனத்தைச் சேர்ந்த 28 வயதான விளையாட்டு பத்திரிகையாளர் ஒருவர் பெல்லட் (Pellet) குண்டுகளால் சுடப்பட்டுப் பலத்த காயமடைந்து உள்ளார். பேரணி நடந்து முடிந்து 3 நாட்கள் கடந்த நிலையிலும், உடலில் 30-க்கும் மேற்பட்ட சிறு குண்டுகள் தங்கியிருக்க, தீவிர வலியோடு வீட்டிலிருந்தபடியே அவர் பணியாற்றி வருகிறார்.
பெல்லட் குண்டுகள் ஊசிபோன்ற வடிவம், முக்கோண வடிவம், பால் பேரிங் என பல்வேறு வகைகளில் உள்ளன. ஒருமுறை பெல்லட் துப்பாக்கியால், ட்ரிகரை அழுத்தி சுடும்போது, சில நூறு குண்டுகள் வெடித்துச் சிதறும். இந்த பெல்லட் குண்டுகளும், துப்பாக்கிகளும் இஷாபூரில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.
ஜூலை 22 அன்று சஃப்தர்ஜங் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையின்படி, ஜூலை 20 அன்று ஜந்தர் மந்தரில் நடந்த தாக்குதலின் போது, பெல்லட் துப்பாக்கிச்சூடு காரணமாக அவரது வலது கை, நெஞ்சு, முதுகுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், அவரது வலது கை, நெஞ்சு மற்றும் முதுகுப் பகுதியில் சிறிய அளவிலான ஆழமான காயங்கள் இருப்பதும், அவை பெல்லட் குண்டுகளால் ஏற்பட்ட காயங்களுடன் ஒத்துப் போவதும் கண்டறியப்பட்டது. காயங்களின் வலி ஒருபுறமிருக்க, விளையாட்டின் மீதான ஆர்வத்தால் அவர் வீட்டிலிருந்தே மீண்டும் செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஃபிஃபா தொடர் ஜூலை 19 உடன் நிறைவடைந்தது. இன்று (ஜூலை 23) இந்தியா – ஜிம்பாப்வே இடையே கிரிக்கெட் போட்டி நடப்பதால், அதுகுறித்த செய்திகளைக் கவனித்து வருகிறேன் என்று கூறும் அந்தப் பத்திரிகையாளர், விரைவில் களத்திற்குச் சென்று பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜந்தர் மந்தரில் என்ன நடந்தது? கடந்த ஜூலை 20 அன்று, தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி Cockroach Janta Party ‘சலோ சன்சாத்’ பேரணியை நடத்தியது. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்ற பிறகே, இந்த பேரணியில் பங்கேற்க நான் முடிவு செய்தேன் எனப் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் கூறினார். பேரணி ஜந்தர் மந்தரிலிருந்து கன்னாட் பிளேஸ் பகுதியை நோக்கி நகர்ந்தபோது, மாலை 4 மணியளவில் கலவரமும் தடியடியும் வெடித்தது.
ஆரம்பத்தில் காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வானத்தை நோக்கிச் சுட்டது. ஆனால், திடீரெனக் கூட்டத்தை நோக்கி நேரடியாக சுடத் தொடங்கினர். எனக்கு சற்று முன்னே நின்றுகொண்டிருந்த ஒருவரின் கண்ணுக்கு மேலே, கண்ணீர்ப்புகைக் குண்டு நேரடியாக தாக்கியது. உடனே மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினர் என அவர் அச்சத்துடன் நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அப்போது காவல்துறை அதிகாரி ஒருவர் என் மீது துப்பாக்கியைக் குறிவைப்பதைப் பார்த்தேன். நான் உடனே திரும்பி ஓடத் தொடங்கினேன், ஆனால் என் முதுகில் ஏதோ பலமாகத் தாக்குவதை உணர்ந்தேன். முதலில் நரம்புகளில் சுர்ரென்ற உணர்வு ஏற்பட்டது, அடுத்த நொடியே என் முதுகில் தீப்பிடித்து எரிவது போல் கடுமையான வலி உண்டானது என்றார்.
கன்னாட் பிளேஸ் பகுதியில் காவல் கட்டுப்பாடுகள் இருந்ததால், சுமார் 1 மணி நேரம் காத்திருந்த பிறகே அவர் தன் மோட்டார் சைக்கிளில் நண்பரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். நான் நண்பரின் வீட்டிற்குச் சென்று சட்டையைக் கழற்றிப் பார்த்தபோது, அது ரத்தத்தில் நனைந்திருந்தது. எனது நண்பர் அந்த காயங்களைப் புகைப்படமெடுத்து சாட்ஜிபிடியில் பதிவேற்றி ஆய்வு செய்தார். அப்போதே அது பெல்லட் குண்டுகளால் ஏற்பட்ட காயம் என எங்களுக்கு முதன்முதலாகச் சந்தேகம் ஏற்பட்டது என அவர் தெரிவித்தார்.
மறுநாள் ஜூலை 21 மாலை 7 மணியளவில் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த அவருக்கு, அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரை தீவிர பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சி.டி ஸ்கேன், எம்.ஐ.ஆர் மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது உடலில் 30-க்கும் மேற்பட்ட பெல்லட் ரவைகள் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அந்த ரவைகளை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுப்பது மேலும் ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனது உடலில் அதிக எண்ணிக்கையில் ரவைகள் இருந்தன. நானே 25 முதல் 30 ரவைகளை எண்ணினேன். அவற்றை அறுவை சிகிச்சை செய்து எடுக்க முயன்றால் உடலில் பல வெட்டுக்காயங்களை உருவாக்க வேண்டும் அது நன்மையை விட ஆபத்தையே அதிகம் தரும் என மருத்துவர்கள் கூறினர். அதனால் ‘குண்டுகள் உடலிலேயே இருக்கட்டும்’ என விட்டுவிட்டனர் என்று அவர் கூறினார். நல்லவேளையாக அந்த குண்டுகள் எலும்புகளுக்கு மிக அருகில் செல்லவில்லை என்பதால், அவர் பெரிய ஆபத்திலிருந்து தப்பினார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எலும்பில் பட்டிருந்தால் அவரது கையை அசைக்க முடியாமல் போயிருக்கலாம்.
தற்போது வலி தீவிரமடையும் போது மட்டும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள அவர், எலும்பியல் நிபுணரிடம் தொடர் சிகிச்சை பெறத் திட்டமிட்டுள்ளார். மேலும், தனக்கு ஏற்பட்ட இந்தக் காயங்களுக்கு மத்திய அரசிடமிருந்து உரிய இழப்பீடு (Compensation) பெற விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
