சென்னை: தெற்கு அந்தமான் ஒட்டிய வங்கக் கடலில், இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: மத்திய மேற்கு வங்கக் கடலில், மிக தீவிர புயலாக நிலவிய ‘அர்னாப்’ நேற்று அதிகாலை, 2:00 மணி முதல் காலை, 8:00 மணிக்குள், ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்பகுதியில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது.
இது, நேற்று காலை, 8:30 மணி அளவில், தீவிர புயலாகவும், அதன்பின் பிற்பகலில் புயலாகவும் வலுவிழந்து, ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய வங்கக் கடலில், வளி மண்டலத்தில் சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, அப்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று உருவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
