இன்று சுக்கிர வார பிரதோஷம் 2026 அக்டோபர் : சிவ அருளுடன் லட்சுமி கடாட்சம் பெற வழிபட வேண்டிய சரியான முறை

சிவபெருமானின் திருவருளைப் பெறுவதற்குரிய சிறந்த அஷ்ட விரத தினங்களில் பிரதோஷ விரதம் முதன்மையானது. பாற்கடலைக் கடைந்த போது எழுந்த கொடிய ஆலகால விஷத்தை, உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு ஈசன் உண்டு தன் கண்டத்தில் அடக்கிய, மீண்டும் மயக்கம் தெளிந்து எழுந்து தேவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வேண்டிய வரங்களை மகிழ்ச்சியுடன் அளித்த புண்ணிய காலமே பிரதோஷ வேளையாகும். ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்திற்குத் தனித்தனிச் சிறப்புகள் உண்டு. அந்த வகையில், செல்வத்திற்கும் சுகபோகங்களுக்கும் அதிபதியான சுக்கிர பகவானுக்குரிய வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம், “சுக்கிர வாரப் பிரதோஷம்” என்று சிறப்பித்துப் போற்றப்படுகிறது.

சுக்கிர வாரப் பிரதோஷத்தில் செல்வ வளம் பெருக செய்ய வேண்டியவை :

லட்சுமி கடாட்சமும் திருவருளும்- வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்குரிய வழிபாட்டு நாளாகும். அன்றைய தினம் சுக்கிரனின் ஆதிக்கமும் நிறைந்திருக்கும். இந்த நாளில் சிவபெருமான் மற்றும் மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், சிவலிங்கத்திற்கு வில்வம் படைத்து வழிபடுவதும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான பொருட் செல்வத்தை மட்டுமின்றி, அருட்செல்வத்தையும் வழங்கும்.

சுக்கிர தோஷ நிவர்த்தி – ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருப்பவர்கள், சுக்கிர திசை அல்லது சுக்கிர புத்தி நடப்பவர்கள், தம்பதியினருக்குள் ஒற்றுமைக் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் திருமணத் தடையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த நாள் மிகச் சிறந்த பரிகார நாளாக அமைகிறது. வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி, அம்மனுக்குச் சர்க்கரை பொங்கல் அல்லது பால் பாயசம் நிவேதனமாக வைத்து வழிபடலாம்.

நந்தி தேவர் வழிபாடு :

பிரதோஷ காலத்தில் ஈசனின் வாகனமான நந்தி தேவருக்கே முதல் முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது. நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவ தரிசனம் செய்வது கோடி புண்ணியங்களைத் தரும் என்பது ஐதீகம். சுக்கிர வாரப் பிரதோஷத்தன்று நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடுவது விசேஷமானது. நம்முடைய நியாயமான கோரிக்கைகளை நந்தி தேவரின் செவிகளில் கூறி வேண்டிக் கொண்டால், அவர் அதனை அப்படியே ஈசனிடம் சேர்ப்பித்து உடனடியாக நிறைவேற்றி வைப்பார்.

விசேஷ அபிஷேகப் பொருட்கள்:

வெள்ளிக்கிழமை பிரதோஷத்தன்று நந்தி தேவருக்குப் பின்வரும் பொருட்க ளைக் கொண்டு அபிஷேகம் செய்வது அளப்பரிய பலன்களைத் தரும்.

– பஞ்சகவ்யம் மற்றும் பால்: தீராத பிணிகளைத் தீர்த்து நீண்ட ஆயுளைத் தரும்.

– தயிர்: நன்மக்கள் பேறு மற்றும் குடும்ப சுபிட்சம் உண்டாகும்.

– தேன்: வாழ்க்கையில் இனிமையையும், கலைகளில் தேர்ச்சியையும் தரும்.

– சந்தனம் , பன்னீர்: லட்சுமி கடாட்சத்தை ஈர்த்து, பெயர் புகழும் தரும்.

– இளநீர்: மன அமைதியையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தரும்.

– அர்ச்சனை: சிவபெருமானுக்குப் பிரியமான வில்வ இலைகளும், நந்தி தேவருக்கு உகந்த அருகம்புல்லும் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும், சுக்கிரனுக்கு உகந்த வெள்ளை நிற மலர்களான முல்லை, மல்லிகை கொண்டு ஈசனையும் நந்தியையும் வழிபடுவது கூடுதல் சிறப்பு.

சோமசூக்த பிரதட்சிணம்:

பிரதோஷத்திற்குரிய விசேஷ வலம் வரும் முறையான “சோமசூக்த பிரதட்சிணம்” செய்து ஆலயத்தை வலம் வருவது நம்முடைய பாவங்களையும், முன்னோர்களின் சாபங்களையும் நீக்கும்.

சுக்கிர வார பிரதோஷ வழிபாட்டின் பலன்கள் :

-செல்வ வளம் பெருகும்: பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிப்பவர்கள், வியாபாரத்தில் நஷ்டத்தைச் சந்திப்பவர்கள் இந்த நாளில் ஈசனை வணங்கினால் சுக்கிரனின் அருளால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, செல்வச் செழிப்பு உண்டாகும்.

– திருமண பாக்கியம் மற்றும் தம்பதி ஒற்றுமை: சுக்கிரன் களத்திர காரகன் (திருமண வாழ்க்கைக்கு அதிபதி) என்பதால், சுக்கிர வாரப் பிரதோஷ விரதம் ஜாதக ரீதியான திருமணத் தடைகளை நீக்கி, சுப காரியங்களை கைகூடச் செய்யும். கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

– சொத்துச் சேர்க்கை: வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்கள் போன்ற வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த வழிபாடு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்.

– மன அமைதியும் ஆரோக்கியமும்: அன்றாட வாழ்க்கையின் சஞ்சலங்கள், மன அழுத்தங்கள் நீங்கி, நல்ல ஆரோக்கியமும், குடும்பத்தில் நிம்மதியும் நிலைத்திருக்கும்.

“நமச்சிவாய” என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சார ஓதி, சுக்கிர வாரப் பிரதோஷ நன்னாளில் மாலை வேளையில் சிவாலய தரிசனம் செய்து, நந்தி தேவரையும் எம்பெருமான் சிவபெருமானையும் வழிபட வேண்டும். இதன் மூலம் வறுமை நீங்கி, அனைத்துச் செல்வங்களையும் பெற்று, இகபர சுகங்களுடன் சிவபெருமானின் பேரருளை முழுமையாகப் பெறலாம்.

Source link