சென்னை: இன்ஸ்டாகிராமில் ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்ற சேனலை நடத்தி வந்தவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஹரிஷ். 13 லட்சம் பாலோயர்களைக் கொண்டிருந்த இவர், சேமிப்பு, மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட நிதி தொடர்பான அறிவுரைகளையும், யோசனைகளையும் வழங்கி வந்தார்.
சமூக வலைதளங்களில் சமீப காலமாக இவருக்கு சிலர் மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்து வந்துள்ளனர். மன உளைச்சலில் இருந்த ஹரிஷ், சென்னை முட்டுக்காடு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் ஹரிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஹரிஷின் தந்தை கானத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்துள்ளார். யூடியூபர் ஒருவர் தனது மகன் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்ததாகவும், சமூக வலைதளங்களில் ஹரிஷை குறி வைத்து தாக்கி வந்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
ஹரிஷ் தற்கொலை செய்வதற்கு முன்னதாக, தான் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது; நான் ஏதாவது ஒரு தவறு செய்திருந்தால், நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருத்தங்களோட 5 வருஷத்தோட உழைப்பை திருடி, ‘நான் உங்க குடும்பத்தை டார்கெட் செய்வேன். நீ பாண்டிச்சேரி தானே. பாண்டிச்சேரியில் எனக்கு எம்எல்ஏ, சிஎம் எல்லாம் தெரியும். அப்படின்னு சொல்லிகிட்டு, அவரு அவ்வளவு பேசுகிறார். நீ காசு கொடுக்காமல் எங்க போய்டுவ? நீ காசு தரலைனா, உன்கிட்ட இருக்கிற எல்லாத்தையும் நான் வந்து எடுத்துக் கொள்வேன்,’ அப்படினு எல்லாம் பேசுறாங்க. இதுக்கு அப்புறம் என்ன பண்ணுறதுனு தெரியல.
என்னால மத்தவங்களுக்கு கெட்ட பேரு வர மாதிரி அவரு வந்து அதை கிளப்பி விட்டது, என் நண்பர்களை பார்க்கும் போது குற்ற உணர்ச்சியாக இருக்கு. வருமான வரி அபராதம் போட்டால் 60 சதவீதம் பெனால்டி போடுவாங்க. அதுக்கு பதிலா எனக்கு காசை குடுத்திட்டால், நம்மளே பேசி முடிச்சுக்கலாம்.
இல்லைனா பார்ட் 2, பார்ட் 3 எல்லாம் போடுவேன்னு சொல்லி எனக்கு மென்டல் ஹராஸ்மென்ட் கொடுத்தாருங்க. எனக்கு வேற என்ன பண்றதுன்னே தெரியல. இந்த வீடியோ கண்டிப்பா வெளியே வரும். தயவு செய்து நீங்க வெளியே வராமல் இருந்திடாதீங்க. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோவில் தனக்கு மன நெருக்கடி கொடுத்தது யார் என்பது குறித்து எந்தப் பெயரையும் ஹரிஷ் வெளியிடவில்லை. ஆனால், அவருக்கு நெருக்கடி கொடுத்த டெக் சிஇஓ ஜேசன் சாமுவேல் தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் ஹரிஷிடம் ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு ஜேசன் சாமுவேல் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; ஹரிஷிடம் இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கத்தின் (AMFI) வழங்கும் பதிவு எண் மட்டும் தான் இருந்ததது. செபியிடம் (SEBI) பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகருக்கான உரிமல் இல்லாமல், நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்தது சட்டவிரோதம் என்று தான் கூறினேன். உரிய உரிமம் பெற்று ஆலோசனை வழங்குமாறு வலியுறுத்தினேன். ஆனால், அவர் இந்த முடிவை எடுக்க நான் காரணமல்ல, என்று கூறியுள்ளார்.
ஹரிஷ் தற்கொலை செய்ய தூண்டுதலாக இருந்ததது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
