இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் சமூக ரீதியிலான வன்மத்தையும் ரவுடிசத்தையும் புகழும் வகையில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் நபர்களைக் குறிவைத்துத் தென்மண்டல காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் சிவகங்கையில் 26 வயதான சுள்ளான் மதன் என்ற நபர் படுகொலை செய்யப்பட்டார். இன்ஸ்டாகிராம் மூலம் யார் பெரியவர் என்று இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட நபரின் ஆதரவாளர்கள் பல்வேறு சமூக வலைத்தளப் பக்கங்களை உருவாக்கி, தங்களது சமூக விரோதச் செயல்களை வீடியோவாகப் பதிவிட்டு வெளியிட்டனர். மேலும், பழிக்கு பழி வாங்குவோம் என்று இன்ஸ்டாகிராமில் அவர்கள் பதிவிட்டதும், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் குழுவாக இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரு தரப்பினர் இடையே மோதலைத் தூண்டும் வகையிலும், கொலை மிரட்டல் விடுத்தும் பதிவுகள் வெளியிட்ட 36 சமூக வலைத்தளக் கணக்குகளைச் சிவகங்கை காவல்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. இது தொடர்பாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சமூக வலைத்தளங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்சிப்படுத்தி அச்சுறுத்தல் விடுப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மற்றும் திருச்சி மண்டல காவல் துறையும் எச்சரித்துள்ளது.
தென்மண்டல காவல் துறையின் கீழ் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் ‘ஆபரேஷன் டிஜிட்டல் விஜில்’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 22 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 342 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக 193 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்த 519 சமூக ஊடகப் பதிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
