இருண்டதெல்லாம் பேய் அல்ல; ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை

புதுடில்லி: டாடா நிறுவனத்தில் சில பிரச்னைகள் நிலவுகின்றன. அந்நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டு நீட்டிக்க டாடா சன்ஸ் வாரிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு நோயல் டாடா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

மவுனம்

இந்த விவகாரத்தில் எக்ஸ் வலைதளத்தில் பதிவு வெளியிட்ட காங்கிரஸ் எம்பி ராகுல்,” டாடா குழுமம் கிரிமினல் முறையில் அழிக்கப்படுகிறது. இது குறித்து எந்த வணிக தலைவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இன்னும் எவ்வளவு காலம் இவ்வாறு மவுனமாக இருப்பீர்கள்? அவர்கள் உங்களை முழுமையாக கையகப்படுத்தும் வரை காத்திருப்பீர்களா? இந்திய வணிக உலகம் என்பது பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் விளையாட்டு பொருள் அல்ல. உங்களிடம் துணிச்சல் இல்லை. ஆனால், எங்களிடம் இருக்கிறது. இந்த அநீதிக்கு நாங்கள் நீதியை பெற்றுத் தருவோம்,” எனக்கூறியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு பிரச்னையையும் அரசியல் ஆக்குவதை தவிர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுலை அறிவுறுத்துகிறேன்.வர்த்தக மற்றும் சட்டப் பிரச்னைகளை கிரிமினல் குற்றமாக முத்திரை குத்துவதை ஏற்க முடியாது.

இந்திய தொழில் மற்றும் தொழில்முனைவோரின் வெற்றிகளை இழிவுபடுத்துகிறீர்கள். தற்போது அவநம்பிக்கை மற்றும் நச்சுத்தன்மையை பரப்ப அவர்களை உங்களுடன் சேர தூண்டுகிறீர்களா? பல தசாப்தங்களாக காங்கிரஸ் அரசின் லைசெனஸ் மற்றும் கோட்டா அமைப்பு முறையால் இந்திய தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டனர். கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் வாடினர்.

கொள்கை

மறுபுறம், இந்திய தொழில்துறையை வேலை உருவாக்குபவர்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை தூண்டுவோராக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பார்க்கிறது. தொழில்துறையை ஊக்குவிக்கவும், முதலீட்டை ஆதரிக்கும் வகையில் கொள்கை வடிவமைக்கப்படுகின்றன. தொழில்துறைக்கு ஆதரவு, விவசாயிகளை வலுப்படுத்துவது, இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது ஆகியவற்றில் அரசியல் கட்சிகள், தலைவர்கள், அரசு மற்றும் நிறுவனங்கள் சமமான பொறுப்பை பகிர்ந்து கொள்கின்றன.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப ஆதாரமற்ற ஆசைகளை முன்வைப்பதை விட ராகுலின் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது அவசியம். அனைத்து மக்களுக்கும் இந்திய அரசியல் அமைப்பு நீதியை உறுதி செய்கிறது. நீதிமன்றம் அதனை நிலைநிறுத்துகிறது.

ராகுல், காங்கிரஸ் மற்றும் அக்கட்சியில் இருந்து பிரதமர் ஆனவர்கள் நீதித்துறையை தரக்குறைவாக இழிவுபடுத்திய வரலாறு உள்ளது. ராகுல் அவர்களே, அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் ஆகத் தான் தெரியும் என சொல்லிக் கொள்கிறேன். இதனை தவிருங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Source link