”இரு கைதிகள் தப்பிய விவகாரம்”; 6 காவலர்கள் சஸ்பெண்ட்

புழல் சிறையிலிருந்து இரு கைதிகள் தப்பிய விவகாரம்; சிறைக்காவலர்கள் மீது சிறைத்துறை அதிரடி நடவடிக்கை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து சுரேஷ் (41) மற்றும் சுதீப் போகதி (21) ஆகிய இரு கைதிகள் அடுத்தடுத்து தப்பினர். மிக அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட சிறையாகக் கருதப்படும் புழல் சிறையிலிருந்து, அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பிய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக சிறைத்துறை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தப்பியோடிய இரண்டு கைதிகளையும் தேடி வந்தனர். இந்நிலையில், திருட்டு வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த சுதீப் போகதி, இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதே நேரத்தில், போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதியாக இருந்த சுரேஷ், காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக, சிறைத்துறை காவலர்கள் மீது டிஜிபி சந்தீப்ராய் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி 6 சிறை காவலர்களைப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.