பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் லாகூரில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, பாகிஸ்தானை ஊதித் தள்ளியது, இலங்கையின் இந்த வெற்றியினால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேற்றம் கண்டது. இதனால் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் வரும் சனிக்கிழமை இறுதிப் போட்டியில் களம் காண்கிறது.
ஒருவேளை பாகிஸ்தான் நேற்று முழுத்திறமையுடன் ஆடி வெற்றி பெற்றிருந்தால் இங்கிலாந்து நாளை இலங்கையுடனான கடைசி லீக் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பிருந்தது, ஆனால், நேற்று பாகிஸ்தான் நல்ல மட்டையான பேட்டிங் பிட்ச்சில் 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, அதேசமயம், இலங்கை 18 ஓவர்களில் 114/2 என்று 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதும் அதே பிட்ச்சில்தான். அதனால்தான் பாகிஸ்தான் திட்டமிட்டே தோல்வி அடைந்ததா என்ற கேள்வி எழுகிறது
110 ஆல் அவுட் ஆகி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மட்டுமல்ல, பாகிஸ்தான் பேட்டர்கள் ஆட்டமிழந்த விதம், பவுலிங் செய்த விதம் எல்லாமே சந்தேகத்துக்கு இடமானவை என்பது போலவே தெரிந்தது.
25.3 ஓவர்களில் ஆல் 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் அளவுக்கு பெரிய ‘டெவில்’ பிட்ச்சும் அல்ல, இலங்கைப் பந்து வீச்சு ஒன்றும்1980-களின் மே.இ.தீவுகளின் அசுரப் பந்து வீச்சும் அல்ல.
இலங்கை பந்துவீச்சாளர் மதுஷங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், பாகிஸ்தானின் பேட்டிங் சரிவு முழுவதும் இலங்கை பந்துவீச்சின் அபார ஆதிக்கத்தால் ஏற்பட்டதாகக் கூற முடியாத நிலையே காணப்பட்டது.
ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்த நிலையில், பாகிஸ்தான் பேட்டர்கள் தங்களது விக்கெட்டுகளை மிகவும் மென்மையான முறையில் தாரைவார்த்ததே அணியின் குறைந்த ஸ்கோருக்கும் தோல்வி அடைந்தால் பரவாயில்லை, வெற்றிக்கான முனைப்பு காட்ட வேண்டாம் என்பது போலவே இருந்தது.
பாகிஸ்தான் தரப்பில் பாபர் அசாம் அதிகபட்சமாக 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர மூன்று பேட்டர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டினர்.
இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மதுஷங்கா தனது வேகத்தை 130 கி.மீ.க்கு மேல் வீசவில்லை, இவருக்கு 5 விக்கெட்டுகள். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2-வது 5 விக்கெட் சாதனையை அவர் பதிவு செய்தார். இதற்கு முன்பு 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
எனினும், பாகிஸ்தானின் விக்கெட்டுகள் பலவும் இலங்கை பந்துவீச்சாளர்கள் உருவாக்கிய மிகப் பெரிய அச்சுறுத்தலால் கிடைத்தவை அல்ல என்பதே கவனிக்கத்தக்கது.
தொடக்க வீரர் ஃபகர் ஜமான், சற்று உயரமாக எழுந்த பந்தை சரியாக கட்டுப்படுத்த முடியாமல் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் மதுஷங்காவின் இரண்டாவது ஸ்பெல்லில் அரஃபாத் மின்ஹாஸ், சற்று சுறுசுறுப்பான பவுன்சரை விளையாட முயன்று பேட்டின் மேல்பகுதியில் பட்டு மேலே எழுந்த பந்தை குசல் மெண்டிஸ் வசம் கேட்ச் கொடுத்தார்.
இதன்மூலம் மின்ஹாஸ் – ஹசன் நவாஸ் இணைந்து உருவாக்கிய 27 ரன்கள் கூட்டணி முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக அமைந்த 7-வது விக்கெட் கூட்டணியும் இதுவே. அந்த நேரத்தில் இந்த இருவரும் இணைந்து பாகிஸ்தானின் சரிவை ஓரளவு கட்டுப்படுத்தும் முயற்சியில் இருந்தனர்.
மதுஷங்கா மின்ஹாஸை வெளியேற்றிய பிறகு, ஹசன் நவாஸ் மட்டுமே பின்வரிசை பேட்டர்களுடன் இணைந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், களத்தில் இருந்த ரசிகர்கள் முன்பு கடந்த ஞாயிறன்று நடந்த ஆட்டத்தைப் போன்ற ஓர் அதிரடியை எதிர்பார்த்திருந்த நிலையில், நவாஸ் தனது லாஃப்டட் டிரைவை நேராக லாங்-ஆஃப் திசையில் அடித்து கேட்ச் கொடுத்தார். இதனால் பாகிஸ்தான் 91 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது.
பாகிஸ்தானின் இன்னிங்ஸில் இதுபோன்ற மென்மையான ஆட்டமிழப்புகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. பெய்க், ஷார்ட் கவரில் நேராக கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
சல்மான் அலி ஆகா பேட்டின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஷதாப் கான், ஸ்வீப் ஷாட்டை முயன்றபோது பந்தை சரியாக கட்டுப்படுத்த முடியாமல் குசல் மெண்டிஸிடம் எளிதான கேட்சை வழங்கினார்.
இதனால், பாகிஸ்தானின் குறைந்த ஸ்கோருக்கு மதுஷங்காவின் பந்துவீச்சு காரணமாகச் சொல்லப்பட்டாலும், அதைவிட பாகிஸ்தான் பேட்டர்களின் தவறான ஷாட் தேர்வு, கட்டுப்பாடற்ற ஆட்டம் மற்றும் தேவையற்ற மென்மையான ஆட்டமிழப்புகளே முக்கிய காரணமாக அமைந்தன.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தானாகவே பல விக்கெட்டுகளை தாரைவார்த்தது என்பதே குறிப்பிடத்தக்கது. அதனால்தான் மெக்கல்லம் – ஹாரி புரூக் இங்கிலாந்து படை வெளியேற்றப்பட்டதோ என்ற ஐயம் எழுகின்றது.
