இ.சி.ஆர். புதிய இணைப்பு சாலை: ஐ.டி ஊழியர்களின் பயண நேரம் வெறும் 10 நிமிடமாகக் குறையும்

சென்னையின் முக்கியப் பகுதிகளான ஓ.எம்.ஆர்.மற்றும் இ.சி.ஆர். ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய இணைப்பு சாலை திட்டத்திற்கு தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் கோரியுள்ளது. சோழிங்கநல்லூரில் தொடங்கி கோவளம் வரை அமைக்கப்பட உள்ள இந்த புதிய சாலை, இப்பகுதி ஐடி துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.

இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தனியார் ஆலோசகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் 3 மாதங்களுக்குள் ஆய்வை முடிக்க வேண்டும். நில அளவீட்டுப் பணிகள், போக்குவரத்து ஆய்வு, மண் பரிசோதனை,  நிலம் கையகப்படுத்தும் பணிகள் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவை இந்த ஆய்வில் அடங்கும்.

தற்போதைய நிலையில் சோழிங்கநல்லூர், சிறுசேரி, கேளம்பாக்கம் பகுதிகளில் இருந்து கோவளம் அல்லது மகாபலிபுரம் செல்ல வேண்டுமென்றால் துரைப்பாக்கம் – நீலாங்கரை சாலை வழியாக நீண்ட தூரம் (சுமார் 12 கி.மீ வரை சுற்றி) பயணிக்க வேண்டியுள்ளது. இந்த புதிய இணைப்பு சாலை செயல்பாட்டுக்கு வந்தால், இப்பகுதிகளில் இருந்து கோவளம் செல்வதற்கான பயண நேரம் வெறும் 10 நிமிடங்களாகக் குறையும்.

சோழிங்கநல்லூர் சந்திப்பு என்பது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வணிக மற்றும் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் மிக முக்கியமான மையமாகும். இங்கு நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த புதிய இணைப்பு சாலை ஒரு மாற்று வழியை ஏற்படுத்தித் தந்து, நெரிசலை வெகுவாகக் குறைக்கும்.

ஓ.எம்.ஆர். சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், நாவலூர் மற்றும் சிறுசேரி சிப்காட் ஐடி பூங்காக்களில் வேலை செய்யும் லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள் இசிஆர் கடற்கரை பகுதிகளுக்கும், கிழக்கு கடற்கரை சாலை வழித்தடங்களுக்கும் எளிதாகச் சென்று வர இது பெரும் உதவியாக இருக்கும்

இது தவிர, ஓ.எம்.ஆர். சந்திப்பில் தொடங்கும் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையை, நீலாங்கரையில் உள்ள இ.சி.ஆர். உடன் இணைக்கும் வகையில் 1.465 கி.மீ நீளமுள்ள மற்றொரு இணைப்புச் சாலை பணியும் நடைபெற்று வருகிறது.

30.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த 6 வழிச்சாலை தெற்கு சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும். முதல் கட்டமாக ஓ.எம்.ஆர். தரப்பிலிருந்து 860 மீட்டர் சாலை ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது.

இ.சி.ஆர். நோக்கிய மீதமுள்ள பகுதிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 36 மீட்டர் நீளமுள்ள உயர்மட்ட இரும்புப் பாலம் திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் கட்டுமானப் பணிகளுக்காக ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே சாலையின் சரியான அமைப்பு, நிலம் தேவைப்படும் விபரங்கள், திட்டத்துக்கான மொத்த செலவு மற்றும் கட்டுமானப் பணிகள் தொடங்கும் காலம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

Source link