வாஷிங்டன்: அமெரிக்கா- ஈரான் இடையேயான மோதல் மீண்டும் துவங்கியதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள ஜோர்டானில் உள்ள ஒரு ராணுவ தளத்தை ஈரான் தாக்கியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிடப்பட்ட ராணுவத் தாக்குதல்களை நிறுத்தி வைத்த பிறகு, ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை பொறுப்பேற்றது.
ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். ‘நாங்கள் அவர்களை அடித்து நொறுக்கப் போகிறோம். நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம். அவர்கள் அடி வாங்கப் போகிறார்கள்,’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
அதிபர் டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்கா சக்திவாய்ந்த பதிலடித் தாக்குதல்களைத் துவங்கி உள்ளது. இது குறித்து அமெரிக்கப்படை மத்திய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கப் படைகள் இன்று ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் துவங்கின.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்கு இந்தத் தாக்குதல்கள் ஒரு சக்திவாய்ந்த பதிலடியாகும்,’ என்று கூறியுள்ளது.
