கீவ்: உக்ரைனில் உள்ள துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையில் கடந்த சில ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்தப் போர் தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனின் ஒடீஸா துறைமுகத்தில் இருந்து , கயானா – பிசாவுவில் பதிவு செய்யப்பட்ட எம்வி கோல்டன் லியோ என்ற சரக்கு கப்பல் நேற்று( ஜூலை 19) கிளம்பியது. இந்த கப்பலில் 5 இந்தியர்கள் உட்பட மாலுமிகள் 17 பேர் இருந்துள்ளனர்.
இந்த கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்தினர், அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளது.
