2026-ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை புதுடெல்லி வந்தடைந்தார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அதிபர் புதின் நேரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
#WATCH | Delhi: Russian President Vladimir Putin arrives in India ahead of the BRICS Summit 2026. During his visit, he will also hold talks with PM Narendra Modi and have a series of bilateral meetings. pic.twitter.com/pax5EW70Yu
— ANI (@ANI) September 10, 2026
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டை இந்தியா நடத்துகிறது. உணவு, ஆற்றல் (எரிசக்தி), சுகாதாரம், பேரிடர் மேலாண்மை மற்றும் விநியோகச் சங்கிலி பாதுகாப்பு ஆகிய துறைகளில் உறுப்பு நாடுகளின் கூட்டுப் பங்களிப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம், ஹார்முஸ் நீரிணைப் போக்குவரத்துப் பாதிப்புகள் மற்றும் அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபருடன் சேர்த்து சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது அலி மற்றும் வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை இன்று பிற்பகலில் பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் புதின் நேரில் சந்தித்துப் பேசுகிறார். இதில் பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், மருந்தியல் துறை மற்றும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
சமீபத்தில் (ஆகஸ்ட் 31) கிர்கிஸ்தானின் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் போது இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பில் அரிதான கனிமங்கள் விற்பனை மற்றும் இந்தியாவுக்கு சுகோய் Su-57 (Sukhoi Su-57) ரக அதிநவீன போர் விமானங்களை வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
