சில நேரங்களில் அதிக அளவிலான மனம் மற்றும் உடல் சோர்வு ஏற்படுவது போலவும், கவலை அல்லது மன அழுத்தம் ஏற்படுவதாகவும், நம்மை சுற்றி கெட்ட விஷயங்கள் மட்டுமே நடப்பதாகவும் பலரும் உணர்வது உண்டு. ஆனால் அதற்கு காரணம் என்ன என்று கேட்டால் சரியாக சொல்ல தெரியாமல் இருக்கும் அல்லது காரணமே இல்லாமல் இருக்கும். இது போன்ற எதிர்மறை ஆற்றல்கள் நம்மை சுற்றியும், நம்முடைய வீட்டிலும் இருப்பதாக உணர்ந்திருப்போம். இது போன்ற தீய சக்திகள் நம்மை சுற்றி பரவி இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது கெட்ட விஷயங்கள் அதிகம் நடப்பதாக உணர்ந்தாலோ சில குறிப்பிட்ட மந்திரங்களை தினமும் சொல்லி வந்தாலே தீர்வு கிடைக்கும் என வேத ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன.
தீயசக்திகளிடம் இருந்து விடுபட 5 சக்தி வாய்ந்த மந்திரங்கள் :
1. விநாயகர் மந்திரம் :
“ஓம் கம் கணபதயே நமஹ”
இது விநாயகரின் அருளை பெறுவதற்கான மந்திரமாகும். இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள், தடைகளில் இருந்து மீண்டு வர முடியும் என சொல்லப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு மந்திர ஜபம் அல்லது புதிய செயல்களை துவங்குவதற்கு முன்பு விநாயகர் மந்திரத்தை சொல்லி, விநாயகர் வழிபாட்டுடன் செய்வதால் தடைகள் இல்லாமல், பாதுகாப்பான பாதையில் செல்ல முடியும் என சொல்லப்படுகிறது. வீட்டில் இருந்து வெளியில் புறப்படும் போது, தினமும் காலையில் குளித்த பிறகும், புதிய முயற்சிகளை துவங்குவதற்கு முன்பும் 108 முறை இந்த விநாயகர் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
2. நரசிம்மர் மந்திரம் :
“ஓம் உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ரிஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
மிருத்யோர் மிருத்யும் நமாமி அஹம்”
எதிர்மறை ஆற்றல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களில் இதுவும் ஒன்று. எவர் ஒருவர் இந்த மந்திரத்தை நம்பிக்கையுடனும், பக்தியுடனும் சொல்கிறாரோ அவருக்கு இது பாதுகாப்பு கவசம் போல் இருந்து காக்கும். நெருக்கடியான நிலையின் போது மன தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்க செய்யும். இந்த மந்திரத்தை தினமும் காலையில் அல்லது சூரியன் மறைந்த நிறகு 108 முறை உச்சரிக்க வேண்டும்.
3. துர்கை மந்திரம் :
“ஓம் டும் துர்கயேய் நமஹ”
இந்த மந்திரம், மனஅழுத்தம் மற்றும் கவலைகளை போக்கக் கூடியது. மனதிலும், நம்மை சுற்றிலும் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, பாதுகாப்பை அளிக்கும் என நம்பப்படுகிறது. எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் போதும், தன்னம்பிக்கை குறையும் போதும் இந்த மந்திரத்தை சொல்வது சிறப்பு. இந்த மந்திரத்தை தினமும் காலை அல்லது மாலையில் குறைந்தது 108 முறை சொல்ல வேண்டும். நவராத்திரி காலத்தில் இந்த மந்திரத்தை உச்சரிப்பது உச்சபட்ச பலனை தரும்.
4. காயத்ரி மந்திரம் :
“ஓம் பூர் புவஹ ஸ்வாஹா
தத் சவிதுர் வரேன்யம்
பர்கோ தேவஸ்ய திமஹி
தியோ யோ நஹ ப்ரசோதயாத்”
காயத்ரி மந்திரம் மனதை அமைதிப்படுத்தி, எதிர்மறை ஆற்றல்கள் எளிதில் ஊடுருவ முடியாத பாதுகாப்பு கவசத்தை வழங்கும். இந்த மந்திரம் உள்ளார்ந்த ஆற்றல்களை அதிகரித்து, மனம் தடுமாறாமல் சமநிலையில் வைத்திருக்கும். காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க உகந்த நேரம் அதிகாலை அல்லது மாலை நேரம் ஆகும். தினமும் குறைந்தது3 முறை அல்லது 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
5. அனுமன் மந்திரம் :
“ஓம் ஹூம் ஹனுமதே நமஹ”
இந்த அனுமன் மந்திரம் அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்கள், தீய சக்திகள், எதிரிகள் ஆகியோரிடம் இருந்து பாதுகாக்க பயன்படும். இந்த சக்தி வாய்ந்த மந்திரம் வெற்றி, வலிமை, ஆற்றல்கள், தெய்வீக ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டதாக நம்பப்படுகிறது. இந்த மந்திரத்தை அதிகாலை அல்லது மாலை நேரத்தில் உச்சரிப்பது சிறந்தது.
எந்த ஒரு மந்திரத்தையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடர்ந்து ஜபம் செய்வதால் அது மந்திரம் தெய்வீக சக்தியை பெறும் என்பது ஆன்மீக நம்பிக்கை. மீண்டும் மீண்டும் சொல்லுவதால் அந்த மந்திரத்தில் உள்ள எழுத்துக்கள் மற்றும் சொற்கள் உயிர்பெற துவங்கி, அதிலுள்ள ஆற்றல்களை வெளிப்படுத்தி, அது கவசமாக இருந்து உச்சரிப்பவரை எப்போதும் காக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த சக்தி வாய்ந்த 5 மந்திரங்களையும் தினமும் சொல்லி வந்தால் அவை கவசமாக இருந்து நம்மை காப்பதுடன், கெட்ட விஷயங்கள் நம்மை நெருங்காமல் காக்கும் என்பது நம்பிக்கை.
